திமுக, அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் – அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்

ஊழல் மின்சாரம் என்கிற ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி யின் பதிவு….

கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்”எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிடாமல் தேர்தல் கமிசனும், காவல்துறையும் தொடர்ந்து தடுத்து வருவதை பொதுவெளியில் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடந்த விவரங்களை பதிவு செய்கிறோம்.

கடந்த 15-20 வருடங்களில் நடந்த மின்சாரம் குறித்தான தனியார்மயம் அதன் கொள்ளை லாபம் குறித்தான ஆவணப்படத்தினை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடுவதற்காக அனுமதி கோரி இருந்தோம். பொதுவாக உள்ளரங்க கூட்டங்களுக்கு யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்களுக்கான அடிப்படை உரிமை அது.

ஆனால் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இந்துத்துவத்தினைப் பற்றிய ஆனந்த் பட்வர்த்தனின் 1995 வருட ஆவணப்படத்தினை திரையிட திட்டமிட்ட மாணவர் கூட்டத்தில் திடீரென தேர்தல் கமிசன் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ‘தேர்தல் விதிமுறை’ மீறுகிறீர்கள் என்று சொல்லி ஆவணப்படத்தினை திரையிடுவதை இறுதி நிமிடத்தில் தடுத்தார்கள். மீறினால் வழக்கு பதிவு செய்வோம் என்றார்கள். காரணம் கேட்ட பொழுதில் ‘ ஆவணப்படத்தில் வரும் அத்வானியின் ரதத்தில் தாமரைச் சின்னம் காணப்படுவதால்’ இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று சொல்லி தடுத்தார்கள்.

இதன் காரணமாக ஏப்ரல் 2ம் தேதி திரையிடலுக்கு அனுமதி கோரியிருந்தோம். காவல்துறையும், தேர்தல் ஆணையமும் அதை அனுமதித்திருந்தது. ஆனால் திரையிடலுக்கு முன், அனுமதியை ரத்து செய்கிறோம் என்றார்கள்.

காரணம் கேட்ட பொழுதில் “ நல்லகண்ணு அவர்களை அழைத்திருக்கிறீர்கள் ஆகவே இது அரசியல் கட்சி நிகழ்வாக அனுமதி வாங்கியிருக்க வேண்டும், அப்படி அனுமதி தரவில்லை, ஆகவே அவரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தால் வழக்கு பதிவு செய்வோம் ” என்றார்கள்..

எனவே மூத்த பொறியாளர்கள் அய்யா.நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு விவரங்களை சொன்ன பொழுதில், அவர் இதை பெருந்தன்மையோடு புரிந்து கொண்டு, ”..நான் வருவதால் அனுமதி இல்லாமல் போகுமென்றால், நான் வராமல் தவிர்க்கிறேன். நீங்கள் வெளியிட்ட பிறகு எனக்கொரு குறுந்தகடு அளியுங்கள், அதில் பார்த்துக்கொள்கிறேன்..” என்றார்.

இதை தேர்தல் கமிசனில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து “ ..இதற்கு ஏன் ஊழல் மின்சாரம் எனப் பெயர் வைத்தீர்கள்… ஊழல் என்று பெயர் வருவதை அனுமதிக்க முடியாது” என்று தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார்.

“ ஊழல் என்று பெயர்வைப்பதால் என்ன பிரச்சனை” என்று கேட்டோம்.

”நீங்கள் விழிப்புணர்விற்கு ஆவணப்படம் தயாரித்திருக்கிறீர்கள் என நினைத்தேன், அதனால் அனுமதி கொடுத்தேன். ஆனால் ஊழல் என்பதை என்னால் அனுமதிக்க முடியாது” என்றார்.

“ ஊழல் என்பதும் விழிப்புணர்வு சம்பந்தப்பட்டது தானே” என்று பதில் சொன்னோம்.

“ இதையெல்லாம் ஏற்க முடியாது, நிகழ்வை ரத்து செய்யுங்கள். இல்லையெனில் அனைவரையும் கைது செய்யவேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.

” உங்களிடம் ஆவணப்பட நகல் ஒன்றினை கேட்டதால் கொடுத்தோமே, பார்த்தாலே இதன் விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்குமே” என்று கேட்டோம்.

“ 40 நிமிடம் பார்க்க எனக்கு நேரம் எப்படி இருக்கும்… அதையெல்லாம் பார்க்கவேண்டியதில்லை , ஆகவே அனுமதிக்க முடியாதென்றார்.

இதன் பின்னர் காவல்துறை, உளவுத்துறையினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்..

பின்னர் நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு சென்று, அரங்க மேலதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதாக எச்சரித்தனர் தேர்தல் கமிசன் அதிகாரிகள். “எப்படி தேர்தல் கமிசன் அதிகாரி அனுமதி இல்லாமல், நிகழ்வினை நடத்த அனுமதி கொடுத்தீர்கள் “ என்று மிரட்டியது தேர்தல் கமிசன். இதனால் அரங்க உரிமையாளரும் அனுமதியை மறுத்தார். இதன் பின்னர் அரங்கம் கொடுக்கப்படப் போவதில்லை என்றும் சொல்லப்பட்டது.

எந்த உரிமையில் தேர்தல் கமிசன் அதிகாரிகள் இத்தனை அராஜகத்தோடு நடக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வாறு அழுத்தம் கொடுத்து ஏப்ரல் 2ம் தேதி நிகழ்வை நிறுத்தினார்கள்.

இதன் பின்னர் ஏப்ரல் 4ஆம் தேதி, தேர்தல் கமிசனை தொடர்பு கொண்டு “உங்கள் விதிமுறைப்படி விளக்கம் சொல்லுங்கள், அதன் படி அனுமதி கேட்கிறோம்” என்றோம்.

காவல்துறை அதிகாரிகள் கருத்தினைப் பெற்று அனுமதி தருகிறோம் என்றார்கள்.

‘ அரங்கிற்குள் நடக்கும் நிகழ்விற்கு , எவரிடமும் அனுமதி தேவையில்லை என்பது தெரிந்தும், காவல்துறை அனுமதியை மறுத்தது. பின்னர் காவல்துறையிடம் பேசிய பின்னர் அவர்கள் தேர்தல் கமிசன் ஒப்புக் கொண்டால் தமக்கு ஆட்சேபனை இல்லையென்று அனுமதி கொடுத்தது.

பின்னர் தேர்தல் கமிசனின் உயர் நிலை அதிகாரிகள் ‘இந்த ஆவணப்படத்தினை பார்த்துவிட்டே அனுமதி கொடுக்க முடியும் என்று சொல்லி, ஆவணப்பட நகலை வாங்கிச் சென்றார்கள்.

இன்று மாலைவரை காத்திருக்க வைத்த தேர்தல் கமிசன் உயர் அதிகாரிகள், இரவில் “நாங்கள் உடனடியாக அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி பெற்றே நீங்கள் நிகழ்வு நடத்த வேண்டும். ஆனால் , அரங்கினை நேரில் பார்த்த பின்னரே அனுமதி தருவோம் “ என்று சொன்னார்கள்.

”எப்பொழுது பார்த்து அனுமதி கொடுப்பீர்கள்,ஏனெனில் நாங்கள் ஏப்ரல் 10ம் தேதிக்கு அனுமதி கேட்டிருக்கிறோம், இன்று ஏப்ரல் 7 ம் தேதியாகிவிட்டது.” என்று கேட்டோம்.

“நாளை அரசு விடுமுறை. ஆகவே சனிக்கிழமை காலையில் சென்று பார்த்த பின்னரே கொடுக்க இயலும் “ என்று சொல்கிறார்கள்.

“ நாங்கள் நடத்துவது உள் அரங்க கூட்டம், அதுவும் தொடர்ந்து நிகழ்வு நடக்கும் இடம். இதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டதற்கு எந்த பதிலும் நேர்மையாகவோ, நேரடியாகவோ கிடைக்கவில்லை.

ஏப்ரல் 10ம் தேதி இந்த ஆவணப்படத்தினை வெளியிடுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

உள் அரங்கக் கூட்டத்திற்கான உரிமையில் தலையிட தேர்தல் கமிசன் மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை என்று தெரிந்தும். தேர்தல் கமிசன் குடிமக்களுடைய அடிப்படை உரிமையில் அத்துமீறி தலையிடுகிறது. தன்னுடைய பணியைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களை இன்னலுக்குள்ளாகி வருகிறது. மேலும் எதேச்சதிகார போக்குடன் ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு நசுக்கிவருகிறது. சர்வாதிகார மனநிலையில், தேர்தலில் பங்கேற்காக இயக்கங்கள் என்று தெரிந்தும், “ ஆவணப்படத்தின் பெயரை மாற்று, காட்சிகளை மாற்று, வெளியிடாதே, அரங்கத்தினை மூடுவோம், அரங்கத்தின் மீது வழக்கு போடுவோம், உள் அரங்க நிகழ்வினை நடத்தினால் கைது செய்வோம், காவல்துறை சொல்வதால தடை செய்கிறோம்’ என்று தொடர்ந்து சர்வாதிகார போக்குடனும், மக்கள் விரோத போக்குடனும் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது. இந்த 10-15 நாட்களில் தேர்தல் கமிசனை பலமுறை தொடர்பு கொண்டும், எங்களிடம் விளக்கமாக நாங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை குறித்து எந்தப் பதிவும் ஆவணப்பூர்வமாக கொடுக்கவில்லை. விதிமுறைகள் குறித்து எந்த விளக்கத்தினையும், உதவியையும், வழிநடத்தலையும் இதுவரை தேர்தல் கமிசன் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு அதிகாரியும் தன்னிச்சையாகவும், காவல்துறை வழிகாட்டுதலிலும் நடந்து கொள்கிறார்கள்.

ஒரு ஆவணப்படத்தினை தயாரிக்க, பெயரிட,, வெளியிட உள்ள உரிமையை தேர்தல் கமிசன் தன்னுடைய குறிப்பிட்ட உள்நோக்கத்திற்காக தடுப்பதாகவே நாங்கள் உணர்கிறோம். ஏனெனில் இதுவரை அவர்கள் வெளிப்படையாக எந்த காரண்த்தினையும் கொடுக்காமல் அரங்க உரிமையாளரை மிரட்டுவதன் மூலமாகவும், பிணையற்ற வழக்கில் கைது செய்வோம் என்றும் மிரட்டி நிகழ்வினை தடுத்துக்கொண்டிருப்பது இவர்களது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

பொதுக்கூட்டம், ஆர்பாட்டம் போன்ற பொதுவெளி நிகழ்விற்காக மட்டுமே காவல்துறை அனுமதி பெறவேண்டுமென சட்டம் சொல்கிறது. அதுவும் கூட ஒலி பெருக்கிக்கான அனுமதி மட்டும் தான் பெறவேண்டுமெனச் சொல்கிறதே ஒழிய, எந்த காரனத்திற்காக நடத்துகிறோம் என்பதை சொல்லி அனுமதி வாங்கவோ, கேட்கவோ வேண்டியதில்லை என்பதே அரசியல் சாசன உரிமைவிதி.
ஆனால் எதற்காக, எங்கு, யாரை வைத்து, எந்த கோரிக்கையின் அடிப்படையில் என்பதை கேட்டறிந்து அதன் பின்னரே அனுமதியும், அதை மறுப்பதும் நடக்கிறது. மேலும், நிகழ்வின் இறுதி நாள் வரை அமைதிகாத்துவிட்டு , இறுதியில் அனுமதி மறுத்து பெரும் நட்டத்தினையும், சோர்வையும் திட்டமிட்டு அரசு ஏற்படுத்தும். பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று போராடி கூட்டம் நடத்த அனுமதி கோரும் பொழுது , அடிப்படை உரிமையின் கீழ் உடனடியாக நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிடும், ஆனால் இந்த அலைக்கழிப்பில் அனைத்து ஆற்றலையும், பொருட்செலவினையும் நீங்கள் இழப்பீர்கள். இதை தொடர்ந்து அரசு செய்கிறது. ஆனால் இந்த அயோக்கியத்தனத்தினை தன்னிச்சையாக கேட்டு அறிந்து செய்யவேண்டிய நீதிமன்றமும் இந்த அரசின் அநீதியை தடுத்து நிறுத்த மறுக்கிறது.

இந்த அதிகாரிகளை வைத்துக்கொண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அடிப்படை மாற்றம் என்று வெட்டிச்சவடால் அரசியல் கட்சிகள் பேசுகின்றன.

தேர்தல் கமிசன் தடுத்தாலும் மே பதினேழு இயக்கம் இந்த ஆவணப்படத்தினை மக்கள் நலனுக்காக வெளியிடும். ஊழல் மலிந்த மசோதாக்களை மக்களூக்கு எடுத்துச் சொல்லும் இந்த ஆவணப்படத்தினை நிச்சயமாக வெளியிடுவோம். இன்று தேர்தல் கமிசன் அதிகாரிகளாக வலம்வருபவர்களில் சிலர் ஊழல் மசோதாக்களை நிறைவேற்றியவர்களாகவோ, ஆதரித்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திடீரென புனித வட்டத்தினை தலைக்கு பின்னால் வளர்த்துக்கொண்ட தெய்வப்பிறவிகளைப் போல ‘நேர்மை, நியாயம், கடமை, விதி, சட்டம்: என்று பேசுவதெல்லாம் நம்மைப் போன்ற சாமானியர்களை ஏமாற்றவும், ஒடுக்கவும் மட்டுமே என்பது நமக்கு புரியாமல் இல்லை.
எங்களை கைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் இந்த ஆவணப்படத்தினை வெளியிடும் போராட்டத்தினை கைவிடப் போவதில்லை என்பதை உறுதிபடச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

தேர்தல் கமிசனின் மக்கள் விரோத எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராட்டத்தினை அறிவித்திடுவோம். தேர்தல் கமிசன் நேர்மையற்றும், உள்நோக்கத்துடனும் செயல்படுவதை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவோம். தேர்தல் கமிசன் அதிகாரி திரு.ராஜேஸ் லக்கானி அவர்கள் ஆற்றல் துறையில் அதிகாரியாக செயலாற்றியவர், இவருக்கு இந்த மசோத குறித்தும், இதன் ஊழல் குறித்தும் அறியாதவரோ, அறிய இயலாதவரோ அல்ல. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தினை வெளியிடுவதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையிடுவது ஒட்டு மொத்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சந்தேகத்திற்குரியதாக மாற்றியிருக்கிறது.

எந்த தடை வந்தாலும் சிறை சென்றாலும் மே பதினேழு இயக்கம் இந்த ஆவணப்பட நிகழ்வினை நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சக போராடும் இயக்கங்களின் ஆதரவும், வெகுமக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் எங்களுக்கு இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறோம். நமக்கான மின்சாரத்தினை சுயநலத்திற்காக வணிகமாக்கி, மின் தட்டுப்பாட்டினை செயற்கையாக ஏற்படுத்து மக்கள் நிறுவனங்களை முடக்கியவர்களை அம்பலப்படுத்துவோம்.

சிறை சென்றாலும் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை மே பதினேழு இயக்கம் மக்கள் மன்றத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறது.

தமிழர்களே ஒன்று திரளுங்கள்.

நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்.

Leave a Response