
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.இங்கு, திமுக, அதிமுக, நாதக,தவெக என ஏற்கனவே நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதியகட்சியைத் தொடங்கினார்.
தன்னை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி.தினகரன் மற்றும் பாஜகவுக்குப் பாடம் கற்பிக்க,மருத்துவர் இராமதாசுடன் சேர்ந்து புதிய கூட்டணையை உருவாக்கி அதிர்ச்சி தர சசிகலா திட்டமிட்டார். அதேபோல், பாமகவை இரண்டாக உடைத்து, தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்து உள்ள அன்புமணியைப் பழிதீர்க்க இராமதாசு முடிவு செய்தார்.கடந்த வாரம் தைலாபுரத்துக்குச் சென்ற சசிகலா, இராமதாசைச் சந்தித்து சுமார் ஒன்றரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, துரோகிகளை வீழ்த்த 5 ஆவது அணியை உருவாக்குவது, இருவரும் சேர்ந்து தென்மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும், வடமாவட்ட வன்னியர் வாக்குகளையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சிப்பது, தங்களை ஒதுக்கிய எடப்பாடி, டிடிவி, அன்புமணி, பாஜகவினருக்குப் பாடம் கற்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால், நேற்று இருவரும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, சென்னையில் இருந்து நேற்று மாலை 5.35 மணியளவில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சசிகலா சென்றார். அவரை பாமக செயல்தலைவர் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற சசிகலா, இராமதாசுக்கு பூங்கொத்து கொடுத்தார்.பின்னர் ச்ராமதாசு – சசிகலா ஆகியோர் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, சசிகலாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
பின்னர், இருவரும் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கவில்லை.
அதேசமயம் சசிகலா கட்சி சார்பில் தென்மாவட்டங்களைக் குறிவைத்தும், இராமதாசு தரப்பில் வடமாவட்டங்களைக் குறிவைத்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டணியில் புதுச்சேரி செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கட்சி மற்றும் சிலர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் புதிய கூட்டணியால் தேசிய சனநாயகக் கூட்டணி வாக்குகள் சிதறும் என்பதால், அவர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இராமதாசு அளித்த பேட்டியில்….
பாமகவும், அஇபுதமமுகவும் இணைந்து இந்தத்தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்து ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்,இந்த வெற்றிக்கூட்டணி,மிகப்பெரிய வெற்றியை,மிகப்பெரிய தாக்கத்தைத் தமிழ்நாட்டில் உண்டாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.இந்தக்கூட்டணியை நாங்கள் கையெழுத்திட்டது பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.234 தொகுதிகளிலும் நாங்கள் இருவரும் போட்டியிடுவோம்.கொள்கையளவில் உறுதியாக இருக்கின்ற எந்தக்கட்சி வந்தாலும் சசிகலாவுடன் கலந்துபேசி முடிவு செய்வோம்.தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும், நல்லது நடக்கணும்னுதான் இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்.சிலநேரங்களில்,சிலசமயங்களில் காலதாமதங்கள் நடப்பதும் உண்டு.அந்தவகையிலே இப்போது கொஞ்சம் காலதாமதம் ஆகியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு,முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று கிண்டலாகச் சொன்ன அவர், நான் தேர்தலில் நிற்கமாட்டேன்.ஆனால்,அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி தலைவராக இருப்பேன் என்றார்.
தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில்….
ஒரு சுமுகமான முடிவு எட்டப்பட்டு, இன்று (20 ஆம் தேதி) இராமதாசை தைலாபுரம் இல்லத்தில் வந்து சந்தித்து, எங்களுக்குள் நல்ல பலமான ஒரு கூட்டணியை அமைத்துள்ளோம்.வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்.மக்களுக்கான ஒரு நல்லமுடிவை இராமதாசு எடுத்து, நாங்களும் அவருடன் சேர்ந்து இந்தத்தேர்தலைச் சந்திக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டணி அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணி ஆகியோருக்குக் கடும் அதிர்ச்சி கொடுத்திருப்பதாக அவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.


