
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒதுங்கியிருந்தார் சசிகலா.ஜெயலலிதா மறைவுக்குப் பின் பல பிரிவுகளாகச் சிதறியிருக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்க வேண்டும் என தொடர்ந்து பாடுபட்டுவந்தார்.
ஆனால்,அவருடைய முயற்சிகள் பலிக்காத காரணத்தால், தனியாகக் கட்சி தொடங்கி அந்த வேலையைச் செய்யப்போவதாக அறிவித்தார்.
பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.அந்தக்கொடியில், அதிமுகவின் மூவர்ணத்தை அப்படியே வைத்துக் கொண்டு நடுவில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோரின் முகங்களை அச்சிடப்பட்டிருந்தது.
அதன்பின், பல்வேறு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் தம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார்.
இந்நிலையில்,இன்று கட்சியின் பெயரையும் கட்சிக்கான சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.
அவருடைய கட்சியின் பெயர், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்.சுருக்கமாகச் சொன்னால் அபுமமுக. கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு.
இவற்றை அறிமுகப்படுத்திய சசிகலா, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற என்னுடைய எண்ணத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தென்னந்தோப்பு சின்னம் கிடைத்திருக்கிறது.இந்தச் சின்னத்தில் எங்கள் கட்சியினர் போட்டியிடுவார்கள் என்று கூறினார்.
2021 தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக தனியாக நின்றதால், அதிமுக தோல்வியைச் சந்தித்தது என்று சொல்லப்பட்டது.இப்போது சசிகலா தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுவதால் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நீண்டகால அரசியலனுபவம் உடைய சசிகலா, தனிக்கட்சி தொடங்கி களமிறங்கியிருப்பதால்,தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


