
உலகிலேயே அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, லண்டனில் உள்ள “வாட்டர் எய்டு’ என்ற தன்னார்வ நிறுவனமானது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கப்படும் சுத்தமான குடிநீர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அதற்கடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன.
பாகிஸ்தான் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. அத்தகைய மக்களுக்கு, குடிநீர் வியாபாரியிடம் இருந்து தண்ணீர் வாங்குவதற்கான வாய்ப்பு இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டி வரும்.
சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறையை பொருத்து, இந்தத் தொகை இரட்டிப்பாகும். இந்தியாவில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததற்கு முக்கிய பிரச்னையே நீர் வளங்களை முறையாக பராமரிக்காததுதான்.


