
தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது….
ஒபிஎஸ்ஐ பொறுத்தவரை நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவர்களது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் 2 நாளில் நல்ல முடிவு எடுக்க இருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் எடப்பாடி தலைமையில் இருக்கிற அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ளப்போவதில்லை. துரோகத்துக்கு இடமளிக்க மாட்டேன் என உறுதி அளித்து இருக்கிறார். எனவே விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.
காங்கிரசு – தவெக இணைவது குறித்த கருத்துகள் இப்போது இல்லை.
டிடிவி தினகரன், ஒபிஎஸ் உட்பட ஒவ்வொருவரும், ஒவ்வொருவரோடு கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருப்பது உண்மை. முடிவுகளை எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லை.
இந்த பொங்கலுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வர இருக்கிறார்கள். அமமுகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
வரும் 27, 28 மலேசியாவில் தனது படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள இருக்கிறார். அதன் பிறகு எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்பது அறிவிக்கப்படும். கட்டுப்பாடுகள் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதையெல்லாம் தாண்டி மக்களின் மனதில் அவர் நின்று கொண்டிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு அவர் ஆட்சிபீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனைவரும் செலவு செய்கிறார்கள். ஆனால் செலவே செய்யாமல் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.


