
அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்,டிடிவி.தினகரன்,பாமக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன என்றும் அக்கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்று முடிவு செய்து சொல்லப்பட்டுவிட்டது என்றொரு தகவல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவியது.
இது உண்மைதானா என்று விசாரித்தால்?
அதிமுகவுக்கு ஆதரவாக பிரமன்யா என்ற தேர்தல்வியூக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்கள் மூலமாக அதிமுக 170 தொகுதிகளில் போட்டி, பாமக, பாஜக 23 தொகுதிகளில் போட்டி, அமமுக 6, ஓபிஎஸ் 3 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்த தகவல்களை பலரும் உறுதிப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டு விட்டனர்.
இதை அறிந்ததும் பாஜக, பாமக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டிடிவி.தினகரன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டார். பாமக செயல்தலைவரான ஜி.கே.மணியோ, எங்களை யாரும் இதுவரை கூட்டணிக்கு அழைக்கவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை என்று கூறிவிட்டார்.
கூட்டணியே முடிவாகாதபோது எப்படி தொகுதிகளை ஒதுக்கமுடியும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, திடீரென இதுபோன்ற ஒரு வதந்தியை தனது தேர்தல் யுக்தி தயாரிக்கும் நிறுவனம் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
இந்தச் செய்தி கூட்டணிக்குள் மேலும் குழப்பத்தை அதிகரித்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் அதிமுக அணியில் சேரக்கூடாது என்று சொல்ல இதுவே காரணமாகிவிட்டது.அதனால்தான் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்து கூட்டணி மாற அச்சாரம் போட்டுவிட்டார் ஓபிஎஸ்.
அவரைத் தொடர்ந்து டிடிவியும் வெளியேறி தவெக கூட்டணியில் ஐக்கியமாவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதனால் இப்போது கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியும்,அதிமுக தொண்டர்கள் மத்தியில் விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


