
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு சிக்கல்களை இந்தக் கூட்டணி எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற வகையிலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், 10 நாள் கெடு விதித்திருந்தார். இதையடுத்து செங்கோட்டையனை, கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
இதனால், கடந்த வாரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்கள் அனைவரும், அதிமுகவில் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி 16 ஆம் தேதி (நாளை) தில்லிக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஏற்றார்போல, அவர் மேற்கொண்டு வரும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற மக்கள் பரப்புரைப் பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 17, 18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி,குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க உள்ளார். அவருடன் மூத்த நிர்வாகிகளும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடியின் இந்தப் பயணத்துக்கு, செங்கோட்டையன் டெல்லி பயணம் தான் அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் தில்லி சென்று விட்டு வந்த செங்கோட்டையன் அதிமுகவின் உள்கட்சி நிலவரம் தொடர்பாக அமித்ஷாவிடம் கூறியதாகவும் அதன் அடிப்படையிலேயே,தில்லி தலைமை அழைப்பு விடுத்ததன் பேரில், எடப்பாடி தில்லி செல்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தில்லி செல்லும் அவரிடம் அமித்ஷா, அதிமுக உட்கட்சி நிலவரம் குறித்து கேட்டறிவார் என்று தெரிகிறது. மேலும், செங்கோட்டையன் வலியுறுத்தியதன் அடிப்படையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் வகையில், அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், அதிருப்தியில் இருப்பவர்களையும் இணைக்க வேண்டும் என்று அப்போது அமித்ஷா வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
அதிமுக உட்கட்சி சிக்கல்களில் தலையிட மாட்டோம் என்று அமித்ஷா கூறியிருந்தார்.அவர் சொன்னதற்கு மாறாக அதிமுகவினர் பிரிந்திருப்பதை சாதகமாகப் பயன்படுத்தி பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


