
நேற்றிரவு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30 மணி வாக்கில் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார்.
அங்கு, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலவரம் பற்றி பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் தனக்கு எதிராக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் செய்த சூழ்ச்சிகளை அவர் எடுத்துச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி கூறிய அனைத்தையும், கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று கேட்டாராம். உடனே எடப்பாடி பழனிச்சாமி,தாள் ஒன்றில் பெயர்கள் அடங்கிய மனுவை கொடுத்ததாகத் தெரிகிறது.
தூத்துக்குடியில் பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால் அது எனக்கு மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்’ என்று கூறி இருந்தார். ஆனால் கூட்டணியில் இல்லாதவர்களைச் சந்திக்க அனுமதிப்பதன் மூலம் கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். அவர்களும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி என்று கூறுவார்கள்.தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று இருக்கும்போது அவர்கள் தனி அணியாக இருப்பது எப்படி? ஓபிஎஸ்சுக்கு நேரம் கொடுக்கக்கூடாது என்று எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்கவில்லை. கெஞ்சாத குறையாக சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால், ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
ஏற்கனவே, சென்னை வந்த அமித்ஷாவும் ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறி வரும் ஓபிஎஸ்சை பாஜக தலைவர்கள் தொடர்ந்து சந்திக்க மறுப்பதால் கடும் மனவருத்தத்தில் உள்ளார். இதனால், ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்குச் சென்றுவிட்டார்.
அதேநேரம்,இன்னும் கூட்டணி முழுமையாக முடிவடையவில்லை.அதுவரை பொறுத்திருங்கள் உங்களுக்கு உரிய மரியாதையுடன் அழைப்போம்,பிரதமர் மோடி,அமித்ஷா ஆகியோரை நீங்கள் சந்திக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர்கள் சமாதானம் செய்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.


