
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்,நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது….
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த, அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து 360 டிகிரியில் பலமுறை தெரிவித்துவிட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுக கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியில் உள்ள கட்சி பெயர்கள் கூறும்போது, அமமுக பெயரைக் கூறாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள்.மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த நேரத்திலும் கூட்டணிக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது.அதுபோல் இங்கும் நடக்கும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டும்.
எங்கள் கூட்டணியைக் கண்டு திமுக அச்சத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் கஞ்சா, போதைமருந்து, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. 210 இடங்களில் திமுக தோல்வியடையப் போகிறது. அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திமுகவுக்குச் சென்றது வருத்தமாக உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தேர்தல் பரப்புரையில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று கூறிவருகிறார்.அதற்கு நேரெதிராக, அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்று டிடிவி.தினகரன் சொல்லியிருக்கிறார்.அதோடு முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு அமித்ஷாதான் முடிவு செய்வார் என்றும் கூறியிருப்பது எடப்பாடி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில்,இதுவரை பாஜகவினர் மட்டுமே இவ்வாறு கூறிவந்தனர்.இப்போது டிடிவி.தினகரனும் அதையே சொல்லியிருப்பதால், இது தொடர்பாக அனைவரிடமும் பேசியிருக்கிறார்கள் என்பதும் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருக்கப்போகிறது என்பதையும் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.


