அம்பலமானது அண்ணாமலையின் வெற்று பில்டப் – பாஜக தலைமை அதிர்ச்சி

இந்திய ஒன்றியத்தின் ஆட்சியதிகாரத்தில் பல்லாண்டுகளாக இருக்கிறது பாஜக.ஆனால் தமிழ்நாட்டில் அக்கட்சியால் காலூன்ற முடியவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அதை எதிர்த்துக் களமாடுவதற்கு என்ன வியூகம் வகுக்கலாம் என்பது பாஜக தலைமையின் தற்போதைய ஆலோசனையாக உள்ளது.

தேர்தலுக்கு பலத்த ஆயுதமாக இருப்பது பூத் கமிட்டிகள் தான். அவற்றை முறையாக நடத்த வேண்டும் என்று பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு அப்போது அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கையை பாஜக நடத்தியது.அப்போது முதல் பூத் கமிட்டி உள்ளிட்ட நடவடிக்கைளையும் தொடங்கியது.

அந்த உறுப்பினர் சேர்க்கையில் பெரும்பாலும் போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றும், மாவட்டத்துக்கு ஒரு இலட்சம் வீதம் இலக்கு வைத்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெறும் 10 ஆயிரத்துக்கு குறைவாகவே உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். அதிலும் பெரும்பாலும் போலி உறுப்பினர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, பூத் கமிட்டி அமைப்பதிலும் அண்ணாமலை காலகட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்காமல் ஏனோ தானோ என்று நடத்தியிருப்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தல எதிர்கொள்வதற்காக அண்ணாமலையை மாற்றி விட்டு நயினார் நாகேந்திரனை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்துள்ளது. அவருக்கு அமித்ஷாவால் வழங்கப்பட்ட முதல் உத்தரவே பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்பது தானாம். இதனால் அதிரடியாக களம் இறங்கிய நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டி பட்டியலை எடுத்து நேரடியாகவே ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பூத்களில் ஆய்வு செய்துள்ளார். இந்த பூத் கமிட்டிகள் போலியாக இருந்தது தெரியவந்துள்ளது. பெயரளவில் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரை கமிட்டி நிர்வாகிகளாகப் போட்டிருப்பது தெரியவந்துள்ளது. சில நிர்வாகிகளுக்கு போன் செய்தால், அவருக்குக் கிடைக்கும் பதில்கள் பார்த்தால் ஒரு நிமிடம் தலைசுற்றும் அளவில் உள்ளதாம்.

பூத் கமிட்டி என்ற பெயரில் கட்சிக்குச் சம்பந்தமில்லாதவர்கள் பெயர்களை எல்லாம் சேர்த்துள்ளனர். மாற்றுக் கட்சியினர் கூட இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50 விழுக்காட்டுக்கும் மேலான பூத் கமிட்டிகள் போலியானது என்று தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் நந்திமரத் தெருவில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்றத் தேர்தலுக்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரத்தை நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தார். அப்போது பூத் கமிட்டி கூட்டத்திற்கு வந்த பாஜக நிர்வாகி ஒருவர், ‘சோறு கூட போடுறோம், ஆனால் பாஜவுக்கு ஓட்டுப் போட மாட்டோம்’ என்று பொதுமக்கள் கூறியதாக நயினார் நாகேந்திரனிடம் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த காணொலி இணையத்தில் வைரலாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பாஜக பூத் கமிட்டியில் இடம்பெற்றிருந்த குமார் என்பவருக்கு போன் செய்த போது, ‘நான் கட்சியிலே கிடையாது, எனது நண்பர் சவுண்டு சர்வீஸ்காரர் ஒருவர் எனது பெயரைச் சேர்த்திருப்பார் போல’ என்று நயினாரிடம் சொன்ன விவகாரமும் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் பூத் பட்டியலில் அவரது பெயரும் செல்போன் எண்ணும் பக்காவாக இடம்பெற்றுள்ளது. இப்படி உறுப்பினர் சேர்க்கையிலும் சரி, பூத் கமிட்டி அமைப்பதிலும் சரி எல்லாமே கடந்த காலங்களில் பெயருக்கு மட்டுமே நடந்துள்ளதைக் கண்டு நயினார் நாகேந்திரன் நொந்து போய் உள்ளதாகஜ் கூறப்படுகிறது. கட்சியின் தலைவரையே தெரியாத நிர்வாகிகள் அதிக அளவில் இடம்பெற்றிருப்பது பாஜக தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

அண்ணாமலை தலைவராக இருந்த போது பல்வேறு பில்டப்களை கொடுத்ததால் தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றிவிட்டது என்றே பாஜக தலைமை எண்ணியது. ஆனால் நடந்ததோ வேறு. பரபரப்பான பேச்சுகளால் மட்டுமே மக்களைக் கவர்ந்து வந்த நிலையில், கட்சிப் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை பாஜக மேலிடம் கண்டுபிடித்தது. அதுவும் வலுவான கூட்டணியை ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் மேலிட நிர்வாகிகள் முன்வைத்தனர். கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபவதை விட அவர் செய்தது எல்லாம் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை காலி செய்வதும், பொய்களைப் பரப்புவதற்காக தனக்கென்று வார் ரூம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னை மட்டுமே பிரபலப்படுத்துவதுமாகவே இருந்து வந்தார்.

அண்ணாமலையின் இந்த பொய்கள் எல்லாம் நயினார் நாகேந்திரனின் ஆய்வால் தெரியவந்துள்ளது.இது தமிழ்நாடு பாஜக மற்றும் தில்லி பாஜக தலைமை உள்ளிட்டோரை அதிர வைத்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response