பாஜக கூட்டணிக்கு 7 முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு – அதிமுக பரபரப்பு

அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்த காலம் முதல் அக்கட்சியில் அடிப்படையாக உறுப்பினராக இருந்து வந்தவர் அன்வர் ராஜா. 1986 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த போதும் கூட மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அன்வர் ராஜா வெற்றி பெற்றார்.

பின்னர் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேச வைத்த எம்ஜிஆர் அவரை அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவிலும் இடம்பெறச் செய்து கவுரவித்தார். மொத்தம் 15 பேர் இடம்பெற்ற அந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அன்வர் ராஜாவும் மட்டுமே அமைச்சர் பதவியில் இல்லாதவர்கள்.

எம்ஜிஆர் மறைந்தபின் அதிமுக ஜெ அணி – ஜா அணி என்று இரண்டாக உடைந்த போது எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவளித்தார் அன்வர் ராஜா. 89 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜானகி அணி சார்பில் வேட்பாளராக களமிறங்கி தோல்வி அடைந்தார். அதன் பிறகு கட்சி ஜெயலலிதா வசம் சென்றபோது ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அன்வர் ராஜாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்கவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் 2021 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் 2023 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று மீண்டும் கட்சியில் இணைந்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது முதலே அன்வர் ராஜா தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, முத்தலாக் மசோதாவை பாஜக அரசு மக்களவையில் கொண்டுவந்தபோது அப்போதைய அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்துப் பேசினார். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய போது, ரவீந்திரநாத்தின் நிலைப்பாடு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று சொன்னார் அன்வர் ராஜா.

தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்ததால் அவருக்கு 2021 தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு 2024 மக்களவைத் தேர்தலிலும் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் அவர் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து அதிமுகவிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில்,ஜூலை 21 திங்கள்கிழமை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? என்று விரிவாக விளக்கினார்.

அன்வர் ராஜா கூறியதாவது….

பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அதிமுக முடிவெடுத்த நாள் முதலே அது வேண்டாம் என்று எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். ஆனால் அது எடுபடவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இந்தக் கூட்டணி அமைந்து இத்தனை நாட்கள் ஆகியும்கூட எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித் ஷா சொல்லவில்லை.

பாஜக என்பது தமிழகத்தில் ஒரு நெகடிவ் சக்தி. பாஜக அதிமுகவை அழிக்க நினைக்கிறது. அதற்காகவே இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததன் மூலம் அதிமுக பாஜகவின் கையில் சிக்கியுள்ளது. அதிமுகவை அழித்துவிடுவதே பாஜகவின் நோக்கம். தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுக்கு நேரடிப் போட்டியாக வேண்டும் என்று பாஜக திட்டமிடுகிறது.

ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து, அதில் பாஜகவின் 5 பேர் அமைச்சர்களானாலும் கூட போதும் அதிமுகவை அடக்கி பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும். இதுபோன்ற செயல்களை பாஜக மகாராஷ்டிராவில் செய்திருக்கிறது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவை அழித்துவிட்டு ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம். அதே பாணியில்தான் அதிமுகவை அழிக்க நினைக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. ஏன் அதிமுகவிலும் பலருக்கு அதிருப்தியே. முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் எடப்பாடியை நேரில் சந்தித்து பாஜக கூட்டணி வேண்டாம் எனப் பேசியுள்ளனர். ஆனால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஜகவுக்கு இந்தத் தேர்தல் இலக்கே அல்ல. அவர்கள் இலக்கு அதிமுகவை அழிப்பது மட்டுமே. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்தத் தேர்தல் எங்கள் இலக்கல்ல, நாடாளுமன்றத் தேர்தலே எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார். எனவே, தேர்தல் வெற்றி பாஜக நோக்கம் அல்ல, அதிமுக அழிப்பே அதன் நோக்கம்

இந்தச் சூழ்நிலையில்தான் கருத்தியல் ரீதியாக ஒற்றுமை கொண்ட திமுகவில் நான் இணைந்துள்ளேன். நான் சந்தர்ப்பவாதி அல்ல, கொள்கைவாதி. திராவிடக் கொள்கைகயை, தமிழ் மொழியை, இனத்தைக் காப்பாற்றும் கொள்கை கொண்டவன். இந்தக் கொள்கைகளின் காரணமாக திமுகவில் இணைய விரும்பியதாக நான் கூறியதும், தளபதி மு.க.ஸ்டாலின் என்னை அன்போடு வரவேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு நன்றி.

மு.க.ஸ்டாலின் இந்தியாவின் வலிமையான தலைவர்களில் மிக முக்கியமானவர். பாஜக எதிர்ப்பை தேசிய அளவில் கூர்மைப்படுத்திய தலைவர். அவர் முன்னெடுத்துள்ள கருத்தியல் ரீதியான பயணத்தில் நான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.

தமிழ்நாடு வாக்காளர்கள் காலங்காலமாக மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களைத் தான் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அந்தவகையில் மக்கள் அன்பைப் பெற்ற மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராவார். மு.க.ஸ்டாலினுக்கு நிகராக அதிமுகவில் மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் யாரும் இல்லை. இனியும் இருக்கப்போவதில்லை. அதனால் வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்வர் ராஜாவின் இந்தப் பேட்டியைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியை எதிர்த்த 7 முன்னாள் அமைச்சர்கள் யார்?யார்? அவர்களும் அதிமுகவிலிருந்து விலகப் போகிறார்களா? என்கிற கேள்வி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக உலவிக் கொண்டிருக்கிறது.

Leave a Response