எடப்பாடி அணிக்கெதிராக வாக்கு – சாதிச் சங்க சுவரொட்டியால் பரபரப்பு

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டி வந்தனர். இதனால் தொடர் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

ஓபிஎஸ் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி இம்மாதம் 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ‘‘விழுப்புரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, நான் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்கிறார், தொடர்ந்து தேவர் சமுதாயத்தை அழிக்க சதி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அணியை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்த அணிக்கு எதிராக வாக்களிப்போம். தேவர் இனமே சிந்திப்பீர்’’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி செல்லவுள்ள நிலையில், இந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஓரிருமுறை எடப்பாடி பழனிச்சாமி இதுபோல் சுற்றுப்பயணம் அறிவித்த நேரத்தில் அவருக்கு எதிராக இதுபோன்ற சுவரொட்டிகள் போராட்டங்கள் ஆகியன நடைபெற்றதால் அவருடைய சுற்றுப்பயணம் நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் எடப்பாடி, சிவகங்கை பயணத்தை இரத்து செய்வாரா? அல்லது திட்டமிட்டபடி நடக்குமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Leave a Response