திடீரென பதவி விலகிய ஜெகதீப் தன்கர் – மோடிக்கு நெருக்கடி?

இந்திய ஒன்றியத்தின் துணை குடியரசுத் தலைவராக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்திய ஒன்றியத்தின் 14 ஆவது துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார்.

அவர் பதவியேற்றது முதல்,அவையிலும், அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரசு மற்றும் திரிணாமுல் காங்கிரசு உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கும் பலமுறை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் நேற்று மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை வழிநடத்தினார். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க நோட்டீஸ் தீர்மானம் தொடர்பான மனுக்களை அவரிடம் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வழங்கினர்.

இந்தச் சூழலில் நேற்று இரவு துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது பதவி விலகல் கடிதத்தை அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

அந்தக் கடிதத்தில்…

உடல்நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(அ) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இந்திய துணை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். எனது பதவிக் காலத்தில் அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கும், இனிமையான அற்புதமான பணி உறவுக்கும் குடியரசுத் தலைவரான உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிரதமருக்கும், அமைச்சர்கள் குழுவிற்கும் எனது ஆழ்ந்த நன்றி. பிரதமரின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. மேலும் நான் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் நான் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசம் என்றென்றும் போற்றப்படும். மேலும் எனது நினைவில் பதிக்கப்படும். நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்

என்று தெரிவித்துள்ளார்.

ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் 1951 மே 18 ஆம் தேதி பிறந்தவர் ஜெகதீப் தன்கர். 2003 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றிய தன்கர் 2022 இல் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஜூலை 10 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.அதற்கு மாறாக திடீரென பதவி விலகல் கடிதம் அளித்துள்ளார்.

இது பல்வேறு ஐயங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

75 வயது நிரம்பியவர்கள் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிலைப்பாடு.இதனடிப்படையில் பிரதமர் மோடி 75 வயது நிரம்பியவுடன் பதவி விலக வேண்டும் என்கிற பேச்சு எழுந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் 74 வயது நிறைவடைந்து 75 வயது தொடங்கியிருக்கும் ஜெகதீப் தன்கர், தாமாக முன்வந்து பதவி விலகியிருக்கிறார்.

இதனால், இதுபோல் பிரதமர் மோடியும் பதவி விலகவேண்டும் என்கிற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.இப்படி மோடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இவர் பதவி விலகினாரா? என்கிற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response