
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற தலைப்பில் பரப்புரைப் பயணம் நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை இரவு பொதுமக்களிடையே எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது…
பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், பாஜகவினர் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எங்களுக்குக் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.வாரிசுகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்கள் துடிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எங்களுடைய நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவதுதான். அதற்காக, எங்களுடன் பயணிக்கும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். அந்த வகையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன
இவ்வாறு அவர் பேசினார்.
இதனால் 2026 இல் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொல்லிக்கொண்டிருந்த பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,நாகை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தபோது, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் கூறியதற்குதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
