
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மகனும் இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த அண்ணனுமான மு.க.முத்து நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதலமைச்சர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது….
மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது. அந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்ள என்னால் நேரில் செல்ல முடியவில்லை. எனவே முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் சந்தித்து என்னுடைய ஆறுதல்களை தெரிவித்தேன்.
அரசியல் பாதை, கொள்கை நிலைப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அதையும் தாண்டி ஓர் உறவு இருக்கிறது. கொள்கை கோட்பாடுகள் வேறு.மனித உறவும் மாண்பும் வேறு.
ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்தபோது, என்னைத் தொடர்பு கொண்டு உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் என் அப்பா இறந்தபோது ஆறுதல் கூறியது மட்டுமின்றி, அமைச்சர் பெரியகருப்பனை அருகில் இருக்கச் செய்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்யச் செய்தார். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பும், பண்பும். இந்த நாகரிகம்தான் இந்த மண்ணில் இல்லாமல் போய்விட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக மலர வேண்டும்.
தவெக கட்சித் தலைவர் விஜய்யுடன் தற்போது பேசுவதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஒத்த கருத்து, ஒரே நோக்கம் இருக்கும் என நினைத்தேன். அவரது பாதை மாறிவிட்டது. பயணம் மாறிவிட்டது.அதனால் அவருடன் பேசத்தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்


