
பாஜகவின் நெருக்கடிக்குப் பணிந்து அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.இதை அக்கட்சித் தொண்டர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.ஏனெனில், 2021 தேர்தல் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர்கள், 2026 தேர்தலிலும் நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்தவர்கள் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்ததுதான்.
கூட்டணி சேர்ந்த பிறகு, பாஜக மேலிடத்திலிருந்து சசிகலா,தினகரன்,ஓபிஎஸ் ஆகியோரோடு இணைந்து செயல்பட்டாக வேண்டும், அதற்கான வழியைப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கறாராகச் சொல்லியிருக்கிறதாம்.
ஆனால், அவர்களோடு இணைந்தால் தன்னுடைய மதிப்பு குறைந்துவிடும் என்பதால் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறாராம் எடப்பாடி.
ஆனாலும் பாஜக மேலிடம் இந்த விசயத்தில் தீவிரமாக இருக்கிறது.
அதனால், இப்போது தமிழ்நாடு பாஜக தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் உதவியை நாடியிருக்கிறாராம் எடப்பாடி.
நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த நயினார், அந்த மாவட்டத்தில் செல்வாக்காக இருந்த கருப்பசாமி பாண்டியனிடம் உதவியாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அப்போது, மதுபான பார் உரிமம் வாங்கி நடத்தினார். குவாரி தொழிலில் இறங்கினார். பின்னர் சின்னச் சின்ன வேலைகளைச் செய்தவர், பணகுடி ஒன்றிய செயலாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்றார். 2001 ஆம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ஆனார்.
2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நயினார் தோற்றார். பின்னர் 2011 ஆம் ஆண்டு மீண்டும் நெல்லை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அப்போது தனக்கு மீண்டும் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார்.ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பின்னர் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.கட்சிப் பதவிகளிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.அதனால் அதிமுகவிலிருந்து விலகி, 2017 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2021 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இப்போது பாஜகவின் மாநிலத் தலைவராகிவிட்டார்.
இவர் அதிமுகவிலிருந்து வெளியேறக் காரணம் சசிகலா தான் என்று சொல்லப்படுகிறது.
இதனால், இப்போது மீண்டும் சசிகலாவோடு இணையவேண்டும் என்கிற பாஜக மேலிடத்தின் நெருக்கடியைச் சமாளிக்க நயினார் நாகேந்திரன் உதவியை நாடியிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
நயினார் நாகேந்திரன், சசிகலா,ஓபிஎஸ் இல்லாமலும் தேவர் சமூக வாக்குகளைப் பெற முடியும் என்று மேலிடத்தில் அழுத்தமாகச் சொன்னால் அவர்கள் எடப்பாடியை நெருக்குவதை நிறுத்திவிடுவார்கள் என்பது கணக்கு.
இப்போது நயினார் நாகேந்திரன் என்ன செய்யப்போகிறார்? எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கேட்டு சசிகலா உள்ளிட்டோர் தேவையில்லை என்று சொல்வாரா? மேலிடத்தின் உத்தரவுப்படி அவர்களை மீண்டும் அதிமுகவுடன் இணைத்து வைக்கும் வேலையைச் செய்யப்போகிறாரா? என்பது தான் அரசியல் வட்டாரங்களில் உலவும் பரபரப்பான பேச்சு.


