சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது….
இஸ்லாமியருக்கு அதிமுக பல்வேறு நன்மைகளைச் செய்து கொடுத்திருக்கிறது. புனித ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு விலை இல்லா சந்தனக் கட்டைகளை வழங்கினோம். உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசு ஹஜ் புனிதப் பயண நிதியை இரத்து செய்தபோதும், நாங்கள் அந்த நிதியைத் தொடர்ந்து அளித்து வந்தோம். ஹஜ் பயணத்திற்கான நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தியதுடன், ஹஜ் யாத்திரிகள் சென்னையில் தங்குவதற்கு புதிதாக ஹஜ் இல்லம் கட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அதிமுக அரசு செய்துள்ளது.
என்று பொதுவாகப் பேசினார்.
அதன்பின்பு அவர் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.அப்போது….
பேரறிஞர் அண்ணா கூறியபடி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது.
ஜாதி, மத வேறுபாடு இன்றி தமிழனாக, இந்தியனாக, இயல்பாகவே வாழ்ந்து வருபவன் வருபவன் நான். என்னை நம்பாமல் கெட்டவர்கள் இருக்கலாம், ஆனால் நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை. பதவிக்காகவோ, புகழுக்காகவோ வந்தவன் அல்ல நான்” மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக; ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்குத் துணையாக இருப்பேன். ஆண்டவனை துணையாகக் கொண்டவர்களை யாரும் அழிக்க முடியாது என்று நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மக்களின் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொண்டு செயல்படும். அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித் தன்மையை நாங்கள் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம், பாதுகாக்கிறோம்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் பேச்சில், என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை, ஆண்டவனைத் துணையாகக் கொண்டவர்களை யாரும் அழிக்க முடியாது என்றெல்லாம் அவர் பேசியிருப்பது தன் கட்சியினருக்கும் கட்சியை ஆட்டிப்படைக்க நினைக்கும் பாஜகவுக்கும் சொன்ன வலுவான செய்தி என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.