ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக மார்ச் 5 ஆம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில், இச்சிக்கலால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை கொண்டு ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சி தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் மார்ச் 7 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்னைக்கு அப்பாற்பட்டது என்றும், கூட்டாட்சிக் கொள்கையை இது வெகுவாகப் பாதிக்கும் என்பதால், இப்பிரச்னையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா, கிழக்கில் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா, வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் சேர தங்களின் முறையான ஒப்புதலை அளிக்க வேண்டுமென்றும்; கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலக் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பினை ஏற்று, நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 6 மாநிலங்கள், 14 கட்சிகள் பங்கேற்றன.
கூட்டுக் குழு கூட்டத்தில்,கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரளாவில் இருந்து பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட்), சலாம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), பிரேமசந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்ட்), கும்பக்குடி சுதாகரன் (காங்கிரஸ்), ஜோஸ் கே.மணி (காங்கிரஸ்-மணி), பிரான்சிஸ் ஜார்ஜ் (கேரளா காங்கிரஸ்), தெலங்கானாவில் இருந்து மகேஷ் கவுட் (காங்கிரஸ்), இம்தியாஸ் ஜலில் (ஏஐஎம்ஐஎம்), கே.டிராமாராவ் (பிஆர்எஸ்), ஒடிசா சஞ்சய் குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்), பஞ்சாபில் இருந்து சர்தார் பல்வீந்தர் சிங் (சிரோமணி அகாலி தளம்) என மொத்தம் 6 மாநிலங்களைச் சேர்ந்த 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….
* ஜனநாயக முறையையும் பண்பையும் மேம்படுத்தும் நோக்கிலேயே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டும். அந்நடவடிக்கையை வெளிப்படையாகவும், தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், மாநில அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, உரையாடல் மேற்கொண்டு, அவர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
* 42 ஆவது, 84 ஆவது, 87 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பின்னால் உள்ள நோக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும், தேசிய மக்கள்தொகையை நிலைப்படுத்தலும் ஆகும். இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
* மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்படச் செயல்படுத்தி, அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக ஒன்றிய அரசு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை செய்ய வேண்டும்.
* பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.
* நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்திய பிரதமருக்கு தங்களது கருத்தை தெரிவிக்கும்.
* கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்த பிரச்னையில் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
* ஒருங்கிணைந்த பொதுகருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை அந்தந்த மாநில பொது மக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கை குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆட்சிக்கு வந்தது முதல் தாங்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் மோடியின் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முன்னெடுப்பில் நடந்த இந்த எதிர்வினை கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.