ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டுகள் ஆட்சி இருந்தபோது ஒற்றுமையாகச் செயல்பட்ட அதிமுகவினர் 2021 ஆம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக அதிமுகவுக்குச் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி தட்டிப்பறித்துக் கொண்டார். அந்தநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த வேலுமணி, தங்கமணி, தர்மபுரி கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் மிகவும் துணையாக இருந்தனர்.
அதன்பின், தன் அதிகாரத்தை நிலைநிறுத்த எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். முதற்கட்டமாக 2 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை கொண்டு வர முடிவு செய்தார்.இதற்கு மூத்த நிர்வாகிகள் பலரும் ஒத்துழைக்கவில்லை.
குறிப்பாக, கொங்கு பகுதியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் இதற்கு உடன்படவில்லை. தங்களின் செல்வாக்கைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நினைத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியால் நினைத்ததைச் செய்ய முடிவில்லை. இவர்களை எதிர்த்தால் கட்சியில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என நினைத்து மாவட்டச் செயலாளர் நியமன முடிவைக் கைவிட்டுவிட்டாார்.
அடுத்ததாக பாஜகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதோடு இல்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் கட்சியில் இணைத்தே ஆகவேண்டும் என்பதில் கொங்கு நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க போதிய பணம் தங்களிடம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமியிடம் கைவிரித்து விட்டனர். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதன் மூலம் தேர்தலுக்கான செலவுகளை அவரே கவனித்துக்கொள்வார். அதில் எந்த பிரச்னையும் நமக்கு கிடையாது என வேலுமணி தரப்பினர் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்தால் அவர்கள் குடைச்சல் கொடுப்பதுடன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வைத்து நிர்வாகிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்.நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எடப்பாடி தெரிவித்தும் அதுபோன்று எதுவும் நடக்காது என உறுதி கூறியுள்ளனர்.
இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி தவித்து வருகிறார். இதற்கிடையில் எந்த வம்பு தும்புக்கும் போகாத செங்கோட்டையனை களம் இறக்கியதும் கொங்கு மண்டல நிர்வாகிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்துபோனது. இப்போதே எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுகவில் புதிய பதவிகளை கொண்டு வந்து புதுரத்தம் பாய்ச்ச வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் மூத்த நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி நிர்வாகிகளை நியமித்தால் கோஷ்டி மோதல் ஏற்படும். ஆங்காங்கே பிரச்னையை கிளப்பிவிடுவார்கள். தன்னுடன் இருப்பவர்களில் உண்மையாக இருப்பது யார்? குழி பறிப்பவர்கள் யார்? என்பதை எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார். என்றாலும் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்துவருகிறார் என்றார்.