
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமண்டூர் மற்றும் பூதூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது….
இந்த இடைத்தேர்தல் எதற்கு என்று உங்களுக்குத் தெரியும்? குதிரை பேரத்தில் விலை போய்விட்டனர். இது, வேண்டுமென்றே திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தல்,இயற்கையானது அல்ல.அரசைக் காப்பாற்றுவதற்கு விஜய் அறிவுறுத்தல் பேரில்,அதிமுக தொண்டர்கள் உழைப்பால் வென்றவரை விலை பேசி,ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.அவர் இன்று இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.வெட்கக்கேடான விஷயம்,ஆண்மை இருந்தால் நேருக்கு நேர் மோதவேண்டும்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தோம். அதிமுக ஆட்சிக்கு வரவே மக்கள் வாக்களித்து அவரை வெற்றிபெற வைத்தனர்.கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல்,மக்களை மதிக்காமல்,அதிமுக தொண்டர்களை மதிக்காமல்,பணத்தாசை காரணமாக ஓட்டுப்போட்ட மக்களை மறந்து,உழைத்தவர்களை மறந்து இன்று எதிரணியில் போய்ச் சேர்ந்தனர்.
அவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டவேண்டும்,டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்.இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 12 நாட்களில் ராஜினாமா செய்து,கட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர்.அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.
கரூர் வழக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிபிஐ விசாரணையில் இருக்கிறது.தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது,தீர்ப்புக்குப் பின்னர் தான் கட்சி தமிழகத்தில் இருக்குமா,இல்லையா என்பது முடிவாகும்.இந்தக் கட்சியில் எல்லாமே ரீல்ஸ்,அதுதான் மூலதனம்.அது இல்லையென்றால் அக்கட்சி பியூஸ் போனது.
நான் 52 ஆண்டு காலம் இந்தக்கட்சியில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.நம் அனுபவம் அளவுக்கு தவெக தலைவருக்கு வயசே இல்லை.ஆனால்,அவர்கள் பேசும் பேச்சு அதிகம்,அடக்கி வாசிங்க தம்பி.அந்தக்கட்சி முளைச்சு மூணு இலை விடவில்லை.
வரும் இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்.கணிதா சம்பத் நல்லவர்,வல்லவர்,சிறப்பாகப் பணியாற்றுபவர்.மதுராந்தகம் தொகுதி முழுமையாகத் தெரிந்தவர்,பிரச்னையை அறிந்தவர்,அனைவரும் அவருக்கு ஆதரவு தரவேண்டும்.
ஒரு நாற்காலிக்கு நான்கு கால்களும் சரியாக இருந்தால்தான் உட்கார முடியும்.இப்போது 3 கால்கள்தான் தவெகவுக்கு சொந்தம்,ஒரு கால் மற்ற கட்சி தாங்கிப் பிடிக்கிறது.அது இடறிவிட்டால் நாற்காலி கவிழ்ந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும்.இப்போதே எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது,இந்த ஆட்சி இருக்குமா,இல்லையா என்பது போகப்போகத் தெரியும்.மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் அதற்கு அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


