ஆறு அமைச்சர்களை விரட்டியடித்த தாராபுரம் மக்கள் – பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சத்தியபாமா களத்தில் இருக்கிறார்.இவர்,கடந்தமுறை இதேதொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.வெற்றி பெற்றவுடன் பதவி விலகிவிட்டு,தற்போது தவெக சார்பில் போட்டியிடுவதால், தொகுதி முழுவதும் இவருக்கு எதிரான அலை வீசுகிறது.

சத்தியபாமா செல்லும் இடமெல்லாம்,எங்களிடம் வாக்குக் கேட்டு வரவேண்டாம்,பெட்டி சத்தியபாமா,ரூ.50 கோடி வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட எங்களை ஏமாற்றி விட்டாயே,கட்சி மாறிய துரோகி,காசு வாங்கிவிட்டு கட்சியை காட்டிக் கொடுத்தாயே என மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டியடிப்பதால் மனமுடைந்த நிலையில் உள்ளார்.

இந்நிலையில்,சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர் சம்பத்குமார் நேற்று முன்தினம் இரவு வாக்குசேகரிக்கச் சென்றார்.தாராபுரம் நஞ்சியம்பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது அவரை ஊர் மக்களும், அதிமுகவினரும் முற்றுகையிட்டு,இத்தொகுதியில் அடிப்படை பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும். அதன்பிறகு வாக்குசேகரிக்க வந்தால் போதும்.தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்வார் எனக்கருதி சத்தியபாமாவுக்கு ஓட்டு போட்டோம்.ஆனால், வாக்காளர்களை மதிக்காமல்,தனது சுயலாபத்துக்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டு,தற்போது வேறு கட்சி சார்பில் இங்கு வந்து நிற்கிறார்.மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிடலாம் என கணக்கு போடுகிறார்.அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு யாரும் எங்கள் ஊருக்கு வரவேண்டாம் எனக்கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால்,அமைச்சர் சம்பத்குமாருடன் வந்த தவெகவினர் ஆத்திரமடைந்து ஆக்ரோசமாக பேசியதால்,அதிமுகவினருக்கும்-தவெக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து,அமைச்சரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில்,நேற்றிரவு தவெக வேட்பாளர் சத்தியபாமா,அமைச்சர்கள் செங்கோட்டையன்,புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ்,பிரபு,பர்வேஸ் மற்றும் தவெக கட்சியினர் அடங்கிய குழுவினர் பொட்டிக்காம்பாளையம் கிராமத்திற்குள் வாக்குச் சேகரிக்கச் சென்றனர்.இங்கு 4 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த மக்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு தவெக வேட்பாளர் மற்றும் அமைச்சர்கள் வந்த கார்களை முற்றுகையிட்டு,4 மாதமாக குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம்.அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் வந்தவுடன் ஊருக்குள் வருகிறீர்களா? உங்களை யார் வரச்சொன்னது? உங்களுக்கு யாரும் இங்கு ஓட்டு போடுவதற்கு தயாராக இல்லை.ஊருக்குள் ஓட்டு கேட்டு நுழைந்தால் கார் கண்ணாடி எல்லாம் உடைப்போம் என்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர்.

இதனால்,பரப்புரை செய்ய வந்த தவெக வேட்பாளர்,அமைச்சர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.ஆனால்,பிரசாரம் என்று இங்கு வந்து எதை பேசினாலும் தப்பா போய்விடும்.எனவே ஊரைவிட்டு வெளியே போங்கள் என பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.பொதுமக்களுடன் அதிமுகவினரும் இணைந்து கூச்சலிட்டனர்.இதனால் அதிமுகவினர் மற்றும் கிராமமக்களுடன் தவெகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அதிமுகவினர் பலர் அங்கு திரண்டு வேட்பாளர் மற்றும் அமைச்சர்களை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.துரோகி, துரோகி என அதிமுகவினர் முழக்கமிட்டதால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுகவினரும், தவெகவினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது வேட்பாளருடன் சென்ற காவல்துறையினர் மோதல் ஏற்படாமல் தடுத்து வேட்பாளரையும், அமைச்சர்களையும் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றினர்.பின்னர் பரப்புரை வாகனத்தின் ஒலிபெருக்கியை அனைத்துவிட்டு பரப்புரை செய்யாமலேயே தவெக வேட்பாளர் மற்றும் அமைச்சர்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

தாராபுரத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தவெகவினருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்ற புரியாத குழப்பத்தில் அமைச்சர்களும் தவெகவினரும் உள்ளனர்.

– செல்வன்

Leave a Response