
மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் கட்சியினர் வாக்குக்குப் பணம் கொடுக்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.விஜய் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நேற்று முன்தினம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது….
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளன.செப்டம்பர் 22 ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் நோக்கில், ரெட்டிப்பாளையம் (அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்) பகுதியில் வாக்காளர்களுக்குப் பெருமளவிலான பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது.
மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி முழுவதிலும் இதுபோன்ற சட்டவிரோத பண விநியோகமும்,வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயல்களும் அமைப்பு ரீதியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தடுக்க மாவட்டத் தேர்தல் அலுவலர்கள்,தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் முழுவதும் உடனடியாக,விரிவான கள விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.அனைத்து தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புகள்,சிசிடிவி காட்சிகள்,கள வீடியோ பதிவுகள் மற்றும் சமூகஊடகங்கள்,மின்னணு ஆதாரங்கள் ஆகியவை சேதப்படுத்தப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பு அவற்றை உடனடியாகப் பாதுகாத்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பணம் அல்லது இலஞ்சம் வழங்குவதை மேலும் தடுப்பதற்காக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ள பகுதிகளிலும் பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகள், கண்காணிப்பு வழிமுறைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தைக் காத்தோம் என்று பெருமையாகச் சொன்ன விஜய்க்கு இது பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


