
தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் மாலை தலைநகர் டெல்லிக்குச் சென்றார். அங்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது தெலங்கானாவுக்கு வரவேண்டிய நிதி மற்றும் மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் பேசினார். நாகர் கர்னூலில் குடிநீர் திட்ட சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் அங்கு நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரேவந்த் ரெட்டி கூறியதாவது….
பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும், மத்திய பாதுகாப்புத் துறைத் திட்டங்களை ஐதராபாத்தில் செயல்படுத்த வேண்டும், வெளிவட்டச் சாலை மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
மத்திய அரசின் மும்மொழித் திட்டம் குறித்து தற்போது பரவலாக விவாதம் நடந்து வருகிறது. தெலங்கானாவில் வரும் 2025-26 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும்.
இது, தெலங்கானாவில் 2018 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தாலும், அதனை முந்தைய பிஆர்எஸ் அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. இந்தத் திட்டத்தை நாங்கள் முழுமையாக அமல்படுத்துவோம்.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பிற கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாய பாடமாக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து தெலங்கானா வந்து படிக்கும் மாணவர்கள் சுலபமாகத் தெலுங்கு மொழி கற்க ‘வெண்ணிலா’ எனும் புத்தகத்தை மாநில அரசு வெளியிடும்.
இவ்வாறு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
அண்மையில், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது.இந்நிலையில் ஒன்றிய அரசு அனுமதியுடன் தொடங்கினாலும் அந்தப் பள்ளியிலும் தெலுங்கு கட்டாயப்பாடம் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருக்கிறார்.
இதையொட்டி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்தவுடன் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துச் சொல்கின்றனர்.


