தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதால் ஒலிமாசு மற்றும் காற்றுமாசு ஆகியன அதிகரித்து சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்திவருகிறது.இதனால் கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அவையாவன….
1.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தீபாவளி தினத்தின்போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
2.பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.
3.மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
4.அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.
5.மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
6.குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டைக் காக்க, நாட்டின் சுற்றுச்சூழல் காக்க இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டுமெனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.