இந்தியா கொண்டாடும் மனிதர் ரத்தன் டாடா – ஏன் தெரியுமா?

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2012 இல் ஓய்வு பெற்றார்.

1996 இல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை ரத்தன் டாடா முதன்முதலில் நிறுவினார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா.கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கினார் ரத்தன் டாடா.

1937 இல் மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, தனது 10 வயதில் இருந்து பாட்டியிடம் வளர்ந்தார். 1959 இல் அமெரிக்காவில் கட்டடக்கலை படிப்பை முடித்துவிட்டு, டாடா குழுமத்தில் பணியாற்றத் தொடங்கினார். படிப்படியாக அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு முன்னேறி, 1991 இல் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவரானார்.

21 ஆண்டு தலைமையில், நிறுவனத்தின் வருவாயை 40 -மடங்குகளும், இலாபத்தை 50 மடங்குகளும் பெருக்கினார்.

1998 இல் டாடா இண்டிகா தொடங்கி, ரூ.1 இலட்சத்திற்கு நானோ கார், ஜாகுவார் லேண்ட் ரோவர் வரை பல புதியனவற்றைச் செய்தார்.

2012 இல் 75 வயதில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.

2016-17 இல் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வழங்கப்பட்டது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவராக, இறுதி மூச்சு வரை ஆலோசனைகள் வழங்கினார்.

பத்ம விபூஷண்,பத்ம பூஷண் விருதுகளை ரத்தன் டாடாவுக்கு வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது.

ரத்தன் டாடா மறைவிற்கு தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள N.C.P.A.மையத்தில் பொதுமக்களின் – அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்;

ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.ரத்தன் டாடா ஆற்றிய தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது.ரத்தன் டாடா குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்…

தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாடா அசாதாரண மனிதர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க நிறுவனத்திற்கு நிலையான தலைமையை வழங்கியவர் ரத்தன் டாடா. பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ரத்தன் டாடா என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

ரத்தன் டாடா மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் கலங்கரை விளக்கம் போல் உயர்ந்து விளங்கியவர் ரத்தன் டாடா. இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வை டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. ரத்தன் டாடா குடும்பத்தினர், டாடா குழும ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இராகுல்காந்தி இரங்கல்…

ரத்தன் டாடா தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர் என எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி புகழாரம் சூட்டினார். ரத்தன் டாடா வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் 1500 கோடி கொடுத்து பற்றி அவரிடம் கேட்டபோது,என் நாட்டுக்காக என் சொத்து முழுவதையும் கொடுக்கத் தயார் என்று சொன்னார்.

அவருடைய இந்த குணத்துக்காகவே அவர் அனைவராலும் கொண்டாடப்படும் மனிதராக இருக்கிறார் என்றால் மிகையில்லை.

Leave a Response