மும்பையில் ஸ்டாண்ட்அப் காமெடி என்று சொல்லப்படும் மேடைச் சிரிப்புரையில் புகழ்பெற்றவர் குணால் கம்ரா.இவர் மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, மகாராஷ்டிரா துணை முதல்வரும் சிவசேனா தலைவருமான ஷிண்டேவை துரோகி என வர்ணித்து பாட்டுப் பாடினார்.
2022 ஆம் ஆண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி சுமார் 40 சமஉக்களுடன் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். இதைக் குறிப்பிடும் வகையில்தான் கம்ரா விமர்சனம் செய்திருந்தார்.
இதனை 2 நிமிட கானொலியாகவும் தயாரித்து வெளியிட்டார்.அந்த காணொலி வேகமாகப் பரவியது. அதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. சிவசேனாவினர் கொந்தளித்தனர். அவர்கள், காணொலி பதிவு செய்யப்பட்ட நட்சத்திர விடுதிக்குச் சென்று அந்த விடுதியையும் ஓளிப்பதிவுக்கூடத்தையும் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 40 சிவசேனாவினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம் மகாராஷ்டிரா முதலமைச்சரே குணாலை கண்டித்துள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், 2024 தேர்தல் முடிவு யார் துரோகி என்பதைக் காட்டி விட்டது. எனவே, குணால் கம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
அதே நேரத்தில், கம்ரா மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 353 (1) பி மற்றும் 356 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்டூடியோவை மும்பை மாநகராட்சி இடித்துத் தள்ளியது. விடுதியின் கீழ்தளத்தில் ஸ்டூடியோ அமைத்துள்ளனர். மாநகராட்சி அனுமதி பெறாமல் இந்த ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. விடுதியும் முறையான அனுமதியுடன்தான் கட்டப்பட்டுள்ளதா? வரைபட அனுமதியை மீறியுள்ளதா என ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக ஹேபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், “குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழுப் பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டிருந்தது.
குணால் கம்ரா மும்பை காவல்துறையிடம் நேற்று பேசியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்போது,
நான் தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறேன். துரோகி என விமர்சித்ததற்காக ஒருபோதும் வருந்தவில்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் இதனை நான் செய்யவில்லை. இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை. தேவைப்பட்டால் எனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்து கொள்ளலாம். மிகவும் மட்டரகமானது, துணை முதல்வரை அவமதித்தது என கோர்ட்டு கோரினால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன். மற்றபடி எந்த விதத்திலும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே நேற்றிரவு 11 மணி அளவில் தனது சமூகவலைதளம் மூலம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் இறுதியில்,
எனக்கு இந்தக் கும்பலைப் பார்த்து பயமில்லை.நான் என் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்ள மாட்டேன்.இந்தக் கும்பல் அழியும் வரை காத்திருக்கிறேன்.
என்று கூறியிருக்கிறார்.