நீண்ட இழுபறிக்குப் பின் இலங்கை புதிய அதிபர் தேர்வு – இந்தியாவுக்கு பாதிப்பு?

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.

அதன்பின், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (செப்டம்பர் 21,2024)நடத்தப்பட்டது.

இதில்,தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக பா.அரியநேத்திரன், சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உட்பட 38 பேர் போட்டியிட்டனர். 1.7 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நேற்று முன்தினம் மாலை 4 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் வெற்றிக்கு தேவையான 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்கவில்லை.வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இலங்கை தேர்தலில், முதல் 3 விருப்பங்கள் அடிப்படையில் 3 வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். மக்களின் முதல் விருப்ப வாக்குகள் முதலில் எண்ணப்படும்.

இதில், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். ஆனால், இம்முறை அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டதால் கடும் இழுபறி நிலவியது. அதிகபட்சமாக என்பிபி கட்சியின் திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள் (42.31 விழுக்காடு) பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 43.6 இலட்சம் வாக்குகளுடன் (32.8%) 2 ஆம் இடம் பெற்றார். ரணில் விக்ரமசிங்கே 22.9 இலட்சம் வாக்குகள் (17.27%) பெற்று 3 ஆம் இடத்தைப் பிடித்தார்.

சில தமிழ்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.26 இலட்சம் வாக்குகள் பெற்றார்.

யாருக்கும் 50 விழுக்காடு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் தொடங்கியது.முதல் சுற்றில் முதல் 2 இடங்களுக்குள் இடம் பெறத் தவறியதால் ரணில் விக்ரமசிங்கே போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் 2 இடங்களைப் பிடித்த திசநாயக, பிரேமதாசா இருவரில் யாருக்கு 2 ஆம் விருப்ப வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது என 2 ஆம் சுற்று எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் நீண்ட இழுபறிக்குப் பின் திசநாயக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய தலைவர் ரத்நாயக நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் தலைவர் இலங்கை அதிபராவது இதுவே முதல் முறை. இன்று நடக்கும் எளிமையான பதவியேற்பு விழாவில் இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக பதவியேற்க உள்ளார். திசாநாயக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவரது கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள திசநாயகவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

55 வயதாகும் திசநாயக, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிமீ தொலைவில் அமைந்துள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்த இவர், கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார். 1987 மற்றும் 1989 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜேவிபி கட்சியின் அரசு எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார். மக்கள் பிரச்னைக்காக களத்தில் நின்று தீவிரமாக குரல் கொடுத்ததன் விளைவாக, 1995 ஆம் ஆண்டு திசநாயக சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார்.

ஜேவிபியின் மத்திய செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் அரசியல் பீரோவில் உறுப்பினரானார். 2000 ஆம் ஆண்டு திசநாயக முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.பின்னர் கட்சியின் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.திசநாயக, 2004 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமான இராணுவ நடவடிக்கையை ஆதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 அதிபர் தேர்தலிலும் திசநாயக போட்டியிட்டார். அப்போது அவர் 4.18 இலட்சம் வாக்குகள் அதாவது மொத்தம் பதிவானதில் 3.16 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

திசநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சி அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான, அதே சமயம் சீன ஆதரவுக் கோட்பாட்டை கொண்ட கட்சியாகும். 1980 களில் இலங்கையின் நலனுக்கான எதிரி இந்தியா என்று போராட்டங்களை நடத்திய ஜேவிபி, 1987 இல் இந்தியா, இலங்கை இடையேயான ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது.

இதனால், திசநாயக அதிபரான பிறகு சீனா பக்கம் சாய்வார் என்றும் இதனால் இந்தியாவுக்குப் பாதிப்புகள் வரலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response