இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21,2024 அன்று நடந்தது.
இத்தேர்தலில், என்பிபி கட்சியின் அனுர திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள் (42.31 விழுக்காடு) பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 43.6 இலட்சம் வாக்குகளுடன் (32.8%) 2 ஆம் இடம் பெற்றார். ரணில் விக்ரமசிங்கே 22.9 இலட்சம் வாக்குகள் (17.27%) பெற்று 3 ஆம் இடத்தைப் பிடித்தார்.சில தமிழ்க் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.26 இலட்சம் வாக்குகள் பெற்றார்.
யாருக்கும் 50 விழுக்காடு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால்,இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நேற்று மதியம் தொடங்கியது.முதல் சுற்றில் முதல் 2 இடங்களுக்குள் இடம் பெறத் தவறியதால் ரணில் விக்ரமசிங்கே போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் 2 இடங்களைப் பிடித்த திசநாயக, பிரேமதாசா இருவரில் யாருக்கு 2 ஆம் விருப்ப வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது என 2 ஆம் சுற்று எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் நீண்ட இழுபறிக்குப் பின் திசநாயக வெற்றி பெற்றதாக தேர்தல்ஆணைய தலைவர் ரத்நாயக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நேற்று (செப்டம்பர் 23) இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அனுர திசநாயக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில், தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் தமிழ்ப் பொதுவேட்பாளர் காத்திரமான பங்காற்றியுள்ளார் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும்,பிரதேசங்களாகவும்,கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர்.தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கைகோர்த்துத் திட்டமிட்டு இதனை நிறைவேற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில்தான் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய உணர்வுத் தளத்தை மீளக்கட்டமைப்பதில் காத்திரமான பங்காற்றியுள்ளார்.
ஒரு இனத்தைத் தேசமாகக் கட்டியமைப்பதில் அந்த இனம் பேசுகின்ற மொழி, தாயகமாகக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு,பண்பாடு ஆகியன வகிக்கும் பங்களிப்புகளுக்கு நிகராக தேசம் என்ற உணர்வு நிலையும் இன்றியமையாதது.
யுத்தத்தின் பின்னரான தமிழர் அரசியலில் தேசம் என்கின்ற உணர்வு நிலை தமிழ்ச் சூழலில் ஊடுருவியுள்ள பெரும்பான்மைக் கடசிகளாலும் அவர்களின் எடுபிடிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளது.இந்நிலையிலேயே தமிழ் மக்களைத் தேசமாக மீளவும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் தான் பெற்ற கணிசமான வாக்குகளின் மூலம் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.
நடைபெற்ற அதிபர் தேர்தலில் தென்னிலங்கைக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர். இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர். ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.