தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) காலமானார்
உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக வணிகர்களை ஒன்று திரட்டிய பெருமைக்குரியவர் வெள்ளையன் என்றும்,அவரின் மறைவு வணிகர்களுக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என்று
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…..
தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில வணிகர் சங்கங்கள் மட்டுமே செயல்பட்டுவந்த நிலையில், தமிழகமெங்கும் உள்ள பெரும் வணிகர்களிலிருந்து சிறு வணிகர்கள் வரை அனைவரையும் ஒன்று திரட்டி ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்து வலிமையான தமிழ்நாடு வணிகர் சங்கத்தை உருவாக்கிய பெருமைக்குரிய நண்பர் வெள்ளையன் அவர்கள் காலமான செய்தியறிய மிக வருந்துகிறேன்.
வணிகர்களுக்குரிய பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றது மட்டுமல்ல, தமிழர்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளிலும் அவர் பங்கெடுத்துக் கொண்டு தீவிரமாகச் செயலாற்றினார். குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சனையில் தீவிரமாக ஆதரவு காட்டியதோடு, அவர்களுக்கான நடைபெற்ற போராட்டங்களில் வணிகர் சங்கத்தையும் பங்கெடுக்கச் செய்தார்.
தமிழ்நாட்டில் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் நடுநிலையோடு செயல்பட்டு, தனது தலைமையிலிருந்த வணிகர்களையும் அவ்வாறே செயல்பட வைத்து வணிகர்களின் ஒற்றுமையை எப்போதும் கட்டிக் காத்தார்.
அவரின் மறைவு தமிழ்நாட்டு வணிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கே பேரிழப்பாகும். அவர் இழப்பினால் வருந்தும் வணிகர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.