ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப் பலம் சேர்க்க வேண்டும் என்று ஒரு ஒருங்கிணைப்புக்குழுவும் செயல்பட்டுவருகிறது.
இது தொடர்பாக நான்கு தரப்பிலிருந்தும் யாராவது ஒருவர் ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று, புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது….
2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடந்து விடும்.
தலித் முதல்வராக வருவதற்கு தலித் எம்எல்ஏக்களே எதிர்ப்புத் தெரிவித்தனர்.எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன்.அப்போது, அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 35 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை, எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் போக்கு மற்றும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.அவர் என்னை விட சீனியர்.
அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உள்ளது.எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு தான் நடக்கும்.
இப்போது எந்த அதிமுக தலைவரோ, நிர்வாகியோ என்னிடம் தொடர்பில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திவாகரனின் இந்தக் கருத்து, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் முதலமைச்சராக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே எதிர்ப்புத் தெரிவித்தார்கள் எனும் தகவல்தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேநேரம்,எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு ஏற்படும் என்று அவர் சொல்லியிருப்பது அதிமுக ஒன்றிணைந்து வலிமை பெற வேண்டும் என்று விரும்பும் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.