நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு தொடக்கம் முதலே குளறுபடியாகவே உள்ளது. தமிழ்நாடு அரசும் மக்களும் தீவிரமாக அதை எதிர்த்தாலும் அதை நீக்க ஒன்றிய அரசு முன்வரவைல்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் நீட் தேர்வு முடிவுகளில் கடும் பித்தலாட்டங்கள் நடந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

இதைக் கண்டித்தும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அவர் அறிக்கை விட்டவுடன் அதை வழிமொழிவது போல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை.

இதுபோக, வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

இதற்கிடையே, ஜூன் 14 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாகத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இக்குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும்,அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது .

இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை இரத்து செய்து பழையபடி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

Leave a Response