தனித் தமிழீழம் காண விரும்பும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியான தீர்வாகும் என அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் வைலிநிக்கல் என்பவர் உள்பட 7 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுத் தீர்மானம் ஒன்றினைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆங்கிலேயர் இலங்கைத் தீவைக் கைப்பற்றுவதற்கு முன்னால் அந்நாட்டில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் தனித்தனி அரசுகள் அமைந்து இயங்கி வந்தன. ஆனால், 1833 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் தமிழர் -சிங்களர் பகுதிகளை இணைத்து ஒரே நாடாக அறிவித்து ஆண்டு வந்தனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் சிங்களர் ஆட்சியில் தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. ஈழத் தமிழர்கள் அறவழியில் போராடி எவ்விதப் பயனும் இல்லாத நிலைமையில், 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை மாநாட்டில் சுதந்திரத் தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இவற்றையும், அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலைச் செய்யப்பட்டதையும் இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
“தென்னாசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குரிய அமெரிக்கத் துணை அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களுக்குத் தன்னாட்சிக் கோரும் உரிமை உண்டு” என்பதை 2006ஆம் ஆண்டில் அவர் இலங்கைக்குச் சென்றபோது வலியுறுத்தினார் என்பதையும் இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தெற்கு சூடான், மான்டி நிக்ரோ, கிழக்கு தைமூர், போஸ்னியா, எரித்ரியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்த அமெரிக்க அரசு துணையிருந்து அந்நாடுகள் சுதந்திரம் பெற உதவியதையும் இந்தத் தீர்மானம் எடுத்துக்காட்டியுள்ளது.
தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் ஈழத் தமிழர்களின் கரங்களை அமெரிக்க அரசு வலுப்படுத்தவேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை உண்டு என்பதை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், சிங்கள அரசு திட்டமிட்டுத் தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிக்கவேண்டும் என்றும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
மே-15, 2024 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் மேற்கண்ட தீர்மானத்தை வைலிநிக்கல், திருமதி. வைல்டு, டேவிஸ், மாலியோ டாகிஸ், கேரிக், டேவிஸ், திருமதி. லீ ஜாக்சன் ஆகியோர் இத்தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். இத்தீர்மானத்தில் கூறியுள்ளபடி ஈழத் தமிழர்கள் தன்னாட்சி உரிமைப் பெற நடத்தும் போராட்டத்துக்கு அமெரிக்க அரசு துணை நிற்க வேண்டுமென உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வேண்டிக்கொள்வதாக அதன் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.