மோடியின் தோல்வி உறுதியாகிவிட்டது – கார்கே திட்டவட்டம்

காங்கிரசுக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, இராகுல் காந்தி, பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது…..

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்தை எழுப்பினார். அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது.தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘மோடியின் உத்தரவாதங்கள்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். 2004 ஆம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது’ கோஷத்துக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே கதி தற்போதைய மோடியின் உத்தரவாதங்கள்’ கோஷத்துக்கும் ஏற்படும்.

1926 ஆம் ஆண்டு முதல் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கையின் மறுவடிவமாகக் கருதப்படுகிறது. காங்கிரசு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தற்போதைய சூழலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

காங்கிரசு தொண்டர்கள் கிராமங்கள், நகரங்களில் கட்சியின் தேர்தல் அறிக்கையை முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து வீடுகளையும் நமது தேர்தல் அறிக்கை சென்றடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.காங்கிரசு பிராந்திய தலைவர்கள், தொண்டர்களுக்கு வழிகாட்டியாக, ஊக்க சக்தியாக செயல்பட வேண்டும். நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

இராகுல்காந்தியின் பாரதயாத்திரை நாடு தழுவிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தனது யாத்திரையின் மூலம் மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை இராகுல் எழுப்பி இருக்கிறார். அவரது யாத்திரை வெறும் அரசியல் யாத்திரை கிடையாது, மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடைபெற்றது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

Leave a Response