காங்கிரசு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ளது.முதல்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரசுக் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரசுக் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில் மார்ச் 8 வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

அதில், சத்தீஸ்கரின் 6 தொகுதிகள், கர்நாடகாவின் 7 தொகுதிகள், கேரளாவின் 16 தொகுதிகள், தெலங்கானாவின் 4 தொகுதிகள், மேகாலயாவின் 2 தொகுதிகள், லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவின் தலா தொகுதியில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள் விவரம்…

வயநாடு – இராகுல் காந்தி
ராஜ்னம்த்லோன் (சத்தீஸ்கர்) – பூபேஸ் பாகல்
மாண்டியா – வெங்கட்ராம கவுடா
பெங்களூரு (ஊரகம்) – டி.கே.சுரேஷ்குமார்
திருவனந்தபுரம் – சசி தரூர்
ஆலப்புழா – கே.சி.வேணுகோபால்
துர்க் (சத்தீஸ்கர்) – ராஜேந்திர சாஹு
திருச்சூர் – முரளீதரன்
பத்தனம்திட்டா – ஆண்டோ ஆண்டனி
கண்ணூர் – கே.சுதாகரன்
ஷிவ்மோகா – கீதா சிவராஜ்குமார்

ஷிவ்மோகா தொகுதியில் போட்டியிடும் கீதா சிவராஜ்குமார், கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி.
மறைந்த முன்னாள் முதலமைச்சரான பங்காரப்பாவின் மகளான கீதா, 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஷிவ்மோகா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் தோல்வியடைந்தார்.

இப்போது அதே தொகுதியில் காங்கிஎசு சார்பில் களமிறங்குகிறார்.இம்முறை அவர் வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.

Leave a Response