இமாச்சலில் மோடி அமித்சா முற்றிலும் தோல்வி – காங்கிரசு வெற்றி

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசு ஆட்சி நடந்துவருகிறது. அந்த ஆட்சியைக் கலைக்க குறுக்குவழிகளைக் கையாண்டது பாஜக.அம்முயற்சியில் மோடியும் அமித்சாவும் தோல்வியடைந்துள்ளனர்.

அண்மையில் அம்மாநிலத்தில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், 43 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் காங்கிரசை எதிர்த்து 25 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, வேட்பாளரை நிறுத்தியது.வாக்களிப்பில் காங்கிரசின் 6 அதிருப்தி உறுப்பினர்களும்,காங்கிரசு ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களும் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர்.

இதனால், பாஜக, காங்கிரசு வேட்பாளர்கள் தலா 34 ஓட்டுகள் பெற்று சமநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குலுக்கல் மூலம் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக, காங்கிரசு அரசின் பெரும்பான்மை கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து, முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுப்பணித் துறை அமைச்சரும் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை முதல்வர் சுக்கு மறுத்தார்.

இமாச்சலில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இராகுல், பிரியங்கா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இமாச்சலில் ஆட்சியைத் தக்க வைக்க நடவடிக்கை எடுப்பதற்காக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட 3 மூத்த பார்வையாளர்களை அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அனைத்து உறுப்பினர்களையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசி கட்சியில் ஏற்பட்ட சிக்கலைச் சரி செய்தனர்.

அடுத்த கட்டமாக, கட்சி மாறி வாக்களித்த உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரசு ஈடுபட்டது.

அவர்களுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் தந்து, 7 நாட்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஆளும் காங்கிரசு அரசின் நிதி மசோதாவுக்கு வாக்களிக்கும்படி கட்சியின் கொறடா கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் கொறடா உத்தரவை மீறியதால் 6 காங்கிரஸ் உறுப்பினர்களையும் சட்டப்பேரவை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் பதானியா கூறுகையில்,காங்கிரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரஜிந்தர் ரானா, சுதிர் சர்மா, இந்தர்தத் லகன்பால், தேவிந்தர்குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சைதன்யா சர்மா ஆகிய 6 உறுப்பினர்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளனர். இதனையடுத்து 6 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உடனடியாக அமலுக்கு வருகின்றது என்றார்.

இமாச்சல் பிரச்னை குறித்து காங்கிரசு மேலிட பார்வையாளர் டிகே சிவக்குமார் கூறுகையில்,

மாநிலங்களவை தேர்தலில் அபிஷேக் மனு சிங்வியின் தோல்விக்கு இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியாகப் பேசி அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு விட்டன. இமாச்சல் முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை. 5 ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார். அனைத்து உள்விவகாரங்களையும் சீர்செய்ய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்த பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார் என்றார்.

காங்கிரசு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்துக் கூறியதாவது…

மற்ற மாநிலங்களைப் போலவே, இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரசு அரசைச் சீர்குலைக்க பணபலம், ஆட்சி பலம் போன்ற விளையாட்டை பாஜக தொடங்கியுள்ளது. ஆனால் தோல்வியடைந்துள்ளது. ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறோம். பிரதமரும், ‘சாணக்யா’ என்று அழைக்கப்படுபவர்களும் இமாச்சலில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளனர். அங்கு நிலைமை முற்றிலும் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response