ஹல்தார் உருவம் எரிப்பு – தஞ்சையில் பரபரப்பு

தமிழ்நாட்டுக் காவிரித் தாயின் கழுத்தை அறுப்பது போல், மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதித்துள்ளது.2024 பிப்ரவரி 1 இல் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அதிகாரிகளின் பங்கேற்போடு சூழ்ச்சிகரமாக வாக்கெடுப்பு நடத்தி, இத்திட்டத்திற்கு அனுமதி அளித்து, அத்தீர்மானத்தை நடுவண் நீர் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார் காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர்!

மேக்கே தாட்டு அணை குறித்த பொருள் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் முன் வைத்தால், அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அதிகாரிகள், மர்மமான முறையில் அக்கூட்டத்தில் வெளிநடப்பு செய்யாமல் பங்கேற்றனர்.

காவிரி ஆணையத் தலைவர் ஹல்தரின் இந்தத் தமிழினப் பகைச் செயலைக் கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு மற்று்ம் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அக்கூட்டத்தில் வெளிநடப்பு செய்யாமல் பங்கேற்றது ஏன்? என விளக்ககமளிக்கக் கோரியும் வலியுறுத்தி, ஹல்தரின் உருவ பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு இன்று (16.02.2024) முன்னெடுத்தது.

தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், பனகல் கட்டடம் அருகில் நடைபெற்ற ஹல்தர் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான உழவர்களும், தமிழ் மக்களும் பங்கேற்று, ஹல்தரின் உருவபொம்மையையும், படங்களையும் எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன்,தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் ப.செகதீசன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் ச.சிமியோன் சேவியர்ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன்,காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுந்தர விமலநாதன், தமிழர் தேசியக் களம் தலைவர் ச.கலைச்செல்வம், இந்திய யூனியன் முசுலீம் லீக் தஞ்சை மாவட்டத் தலைவர் சைனுலாப்தீன், இந்து வேத மறுமலர்ச்சிக் கழகப் பொறுப்பாளர் மறைவி, புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன்,தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னத்துரை,நா.புண்ணியமூர்த்தி (ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்கம்),ஆ.இராமலிங்கம் (தமிழக விவசாயிகள் சங்க ஒன்றியப் பொறுப்பாளர்),மன்னை இரா.இராசசேகர் (தமிழர் தேசியக் களம்), கா.உ.மீ.கு. செயற்குழு உறுப்பினர்கள் சாமி.கரிகாலன்,பொறியாளர் தி.செந்தில்வேலன்,துரை.இரமேசு (வெள்ளாம்பெரம்பூர்),இரா.தனசேகர்(கடமங்குடி),மூ.த.கவித்துவன் (புதுக்கோட்டை மாவட்டம்),க.விடுதலைச்சுடர் (குடந்தை),க.இளங்கோவன் (தென்பெரம்பூர்),கோ.பாலன் (வல்லம் புதூர்),தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு கோ.மாரிமுத்து, பி.தென்னவன் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, கண்டன முழக்கங்களை உணர்ச்சியுடன் எழுப்பிட, ஹல்தரின் உருவபொம்மை தீக்கிரையாக்கப்பட்டு, அவ்விடமே புகைமூடிக் காட்சியளித்தது. செய்வதறியாது திகைத்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்ய முனைந்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர். ஆனால், கட்டுக்கடங்காத கூட்டமென இளைஞர் கூட்டம் ஆங்காங்கு ஹல்தரின் படத்தை எரித்து நின்ற நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையைக் கைவிட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இராசா திரையரங்கு அருகில்,காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் இரா.வேல்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் கோ.அழகர், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி பொருளாளர் ம.செ.இளங்கோவன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இரா.முருகானந்தம், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.மலையாளத்தான்,புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை ஆ.பாவாடைராயன்,புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், புதுச்சேரி தன்னுரிமை கழகத் தலைவர் தூ.சடகோபன், கைவினைஞர் முன்னேற்றக் கழகச் செயலாளர்
ஜெ.தனாளன், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.கௌரி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தொரவிக் கிளைச் செயலாளர் அ.முருகன், தமிழ்த்தேசியப் பேரியக்க மைலம் செயலாளர் பா.குமார், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி வடக்குக் கிளைச் செயலாளர் தே.சத்தியமூர்த்தி, தெற்குக் கிளைச் செயலாளர் ஞா.அசோக்ராசு, மகளிர் ஆயம் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று ஹல்தருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி மற்றும் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் த.இரமேசு ஆகியோர், ஹல்தரின் உருவபொம்மையைத் தீ வைத்துக் கொளுத்தினர். ஹல்தரின் படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும் காவல்துறையினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

இப்போராட்டாளின் போது,

இந்திய அரசே!

தமிழினப் பகையோடு ஒருதலைச்சார்பாக நடந்து கொண்டு, மேக்கேத்தாட்டு அணைக்கு அனுமதி அளித்த காவிரி ஆணையத் தலைவர் ஹல்தரை பதவி நீக்கம் செய்!

மேக்கேதாட்டு அணையை அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய நீராற்றல் துறையே அறிவிப்பு வெளியிடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தலைவர்கள் உரையாற்றினர்.

Leave a Response