கோவை மாவட்டம் காரமடைக்கு தொழில்நுட்பப் பூங்கா கிடையாது – அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 15 அன்று நடந்த கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது குறித்தும், மழை வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான வசதிகள் குறித்தும் மேட்டுப்பாளையம் அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்….

கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம், காரமடையில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது. எல்காட் நிறுவனம் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் இதில் உருவாக்கியுள்ளது. இதில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் இடத்தேவையைப் பூர்த்தி செய்ய 2.66 இலட்சம் சதுர அடி பரப்பில், தகவல் தொழில்நுட்பக் கட்டிட கட்டுமானப் பணிகள் ரூ.114.16 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, காரமடையில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கெனவே துறையின் அமைச்சராக இருந்தவர், 2 ஆம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.இன்றைய நிலையில்,வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறை தகவல் தொழில்நுட்பத் துறைதான். உற்பத்தித் துறையில் முதலீடு செய்தாலும், நிலம் ஒதுக்கவும், கட்டிடம் கட்டவும் 2 ஆண்டுகளாவது ஆகும். ஆனால், ஐடி துறையில் கட்டிடம், இணைய இணைப்பு இருந்தால் உடனே வேலை வாய்ப்பு உருவாகும். அதற்காகத்தான் இந்தத்துறைக்கு ஊக்கமளிக்க முதலமைச்சர் கூறியுள்ளார்.

சராசரியாக ஆண்டுக்கு 40 இலட்சம் முதல் 50 இலட்சம் சதுர அடி அலுவலக கட்டிடம் கட்டப்பட அல்லது குத்தகை எடுக்கப்படக் கூடிய சென்னை மாநகரில், கடந்தாண்டு சாதனையாக 1.10 இலட்சம் சதுரடிக்கான கட்டிடம் ஐடி துறைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

அதே வழியில், எல்காட் நிறுவனம் கடந்த ஆட்சியில் திருச்சி, கோயம்புத்தூர், சென்னையில் 3 கட்டிடங்கள் கட்டினார்கள். ஆனால், சென்னை, கோவைக்கு சுற்றுச்சூழல் அனுமதியே வாங்கவில்லை. இதனால் தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் திறக்க முடியாமல் நீதிமன்ற வழக்கில் உள்ளது. கோவையில் அபூர்வமான வளர்ச்சியும், அலுவலக கட்டிடங்களுக்கான அதிகபட்ச தேவையும் உள்ளது. ஆனால், 2.50 இலட்சம் சதுரடியில் கட்டிடத்தை கட்டி முடித்துத் திறக்க முடியாமல் உள்ளோம்.

இந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் உள்ள திறமையைப் பயன்படுத்த வரும் தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களைக் கட்டி வருகின்றன. எல்காட் மூலமும் நாம் இட வசதி செய்து தருகிறோம். கோவையில் கட்டிடம் திறக்கப்பட்டால், வேலைவாய்ப்பு உருவாகும். இதுதவிர, அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் எல்காட் பூங்காவோ, எல்காட் டவரோ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

வெள்ள பாதிப்பு, பேரிடர் பாதிப்பு வரும் இடங்களில் அதிக பணி இருக்கக் கூடாது. அதேபோல் ஓர் இடத்தில் 10 ஆயிரம் பேருக்கு பணி என்பதைப் பிரித்து 2 இடங்களுக்கு மாற்றுதல் செய்வது என்பது தற்போது நடைபெறுகிறது. மனித வளம் உள்ள இடங்களில் ஈர்ப்பு உள்ளது. இந்தியாவில் 17 சதவீதம் பொறியாளர்கள் தமிழகத்தில் இருந்துதான் வருகின்றனர். தற்போது சென்னையை விட்டு எப்படி நிறுவனங்கள் கோவையை பார்க்கிறார்களோ அதேபோல், பெங்களூரு மற்றும் ஐதராபாத்திலிருந்து சென்னை, கோவை அல்லது மதுரைக்கு வருகின்றனர்.

இதுதவிர, அனைத்து நாடுகளுக்கும் சென்று ஐடி துறையில் தமிழகத்தில் உள்ள மனித ஆற்றலைக் கூறி முதலீடு செய்ய வரும்படி அழைக்கிறோம். சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். கோவைக்கு இன்னும் பல நிறுவனங்களையும் அழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response