சென்னையில் நாடாளுமன்றம் கோரி தீர்மானம் – திருமாவளவன் அதிரடி

திருச்சி சிறுகனூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு, சனவரி 26 மாலை நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்த இந்த மாநாட்டில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, வைகோ, வேல்முருகன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பால்கிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

1.சனநாயகம் காக்க உயிரீந்த ஈகியருக்கு வீர வணக்கம்!

இந்தியாவில் சாதி, மத, பாலின மேலாதிக்கத்தை எதிர்த்து சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடி உயிர் நீத்த ஈகியருக்கும்; கொடும் சட்டங்களின்கீழ் சிறைப்படுத்தப்பட்டுத் துன்பங்களை அனுபவிக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் இம்மாநாடு வீர வணக்கங்களைச் செலுத்துகிறது. அவர்களது இலட்சியங்களை முன்னெடுக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.

2.நூற்றாண்டு காணும் ஆளுமைகளுக்கு வீர வணக்கம்!

பகுத்தறிவுப் பகலவன் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரது கொள்கை வழியில் இந்த மண்ணில் சமத்துவத்தை நிலைநாட்ட தம் வாழ்நாள் முழுவதும் பாடாற்றி, இந்த ஆண்டில் நூற்றாண்டு காணும் பேராளுமைகள் முத்தமிழறிஞர் கலைஞர், ஐயா எல்.இளையபெருமாள், அன்னை சத்தியவாணி முத்து ஆகியோருக்கு இம்மாநாடு வீர வணக்கங்களைச் செலுத்துகிறது.

3.பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக!

நூறு நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியின்மீது இன அழித்தொழிப்புப் போரை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அங்கே உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அது மட்டுமின்றி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்க அரசு தொடுத்திருக்கும் வழக்கில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய அரசும் இணைய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆன பின்பும் இதுவரை இலங்கையின் அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமைகளைக் கூட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை. தமது பாதுகாப்புக்கு ‘சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு அரசியல் தீர்வே தேவை’ என ஈழத் தமிழ் மக்கள் கோருகின்றனர். அதை கவனத்தில்கொண்டு ஈழத் தமிழர்களுக்குச் சமமான உரிமைகள் அனைத்தும் கிடைத்திட இந்திய அரசு தன்னாலான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

4.பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்போம்!

முழுதாகக் கட்டி முடிக்கப்படாத இராமர் கோயிலைத் திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசின் நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அயோத்தியில் மசூதி ஒன்றைக் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கியதோடு அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கச் செய்தது. இராமர் கோயில் திறப்புவிழா நடந்துள்ள நிலையில் மசூதிக்கான கட்டுமானப் பணி துவக்கப்படவே இல்லை.
உச்சநீதிமன்ற ஆணையின்படி மசூதிக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. பெரும்பான்மைவாத உணர்வுகளைத் தூண்டி இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மதச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ள பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களின் வெறுப்பு அரசியலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

5.மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 மே மாதம் முதல் நடைபெற்றுவரும் வன்முறைத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் விதமாக பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டனர். பெரும்பான்மை சமூகமான மெய்தி இனத்தவருக்கு ஆதரவாகவும் கூகி பழங்குடி மக்களுக்கு எதிராகவும் மணிப்பூர் பாஜக அரசு இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.
கடந்த ஒன்பது மாதங்களாக நடத்தப்பட்டு வரும் வன்முறையில் பழங்குடியினரின் ஆயிரக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் மாநில பாஜக அரசின் ஆதரவோடு நடைபெற்றுவரும் இன அழித்தொழிப்பு வன்முறையை இம்மாநாடு கண்டிக்கிறது. மணிப்பூரில் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கும், பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகள் தடையின்றிக் கிடைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக!

இந்தியாவின் தலைநகராக இருக்கும் டெல்லி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இருப்பதாலும், காற்று மாசின் காரணமாக மனிதர்கள் சுகாதாரத்தோடு வாழக்கூடிய இடமாக இல்லை என்பதாலும் இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. அதற்கு ஏதுவாக சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை ஒன்றையும், நாடாளுமன்றக் கட்டடம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

7.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுக!

2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பாஜக அரசு எவ்வித காரணமுமின்றி நிறுத்தி வைத்துள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதற்கு அச்சப்பட்டுத்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பாஜக அரசு நிறுத்தி உள்ளது. இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி போதுமான அளவில் ஒதுக்கப்படாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டுமென்றும் இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட வேண்டும் என்றும் இம் மாநாடு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

8.ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிடுக!

இந்தியா முழுவதற்கும் பாராளுமன்றம் சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என பாஜக கடந்த 25 ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. 1999-2004 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே.அத்வானி இந்த யோசனையை முன்வைத்தார். அத்துடன் நிற்காமல் இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் பேசினார். இப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் இதற்கென குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவைக் குறைப்பதற்காகவே இந்தத் திட்டம் முன்மொழியப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதே பாஜகவின் நோக்கமாகும். நாடாளுமன்ற சனநாயக முறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் சதித் திட்டத்தை இம்மாநாடு கண்டிக்கிறது. இராம்நாத் கோவிந்த் குழுவைக் கலைத்திடுமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9.தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தைத் திரும்பப் பெறுக!

தலைமைத் தேர்தல் ஆணையரை இந்திய பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
ஆனால் அந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக இந்திய பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் என்றும்; அந்தக் குழுவில் மூன்றில் இரண்டு பேர் கருத்து பெரும்பான்மையாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் ஒரு சட்டத்தை இப்போது ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் ஆளுங்கட்சி சார்பான ஒருவரே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இனி நியாயமான தேர்தல் இந்தியாவில் நடக்குமா என்ற ஐயம் எழும்பியிருக்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் உள்ளிட்ட பல சட்ட வல்லுநர்கள், ‘இந்தச் சட்டத்தின் காரணமாக இந்தியாவில் நியாயமாகத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை குலைந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளனர். எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குழு அமைத்துத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10.ஒப்புகைச் சீட்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்திடுக!

வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது ஏற்கனவே மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். இப்போது தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிக்குச் சார்பாக மாற்றப்பட்டு விட்டது. இந்தச் சூழலில் 2024 பொதுத்தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்து விட்டது. எனவே 2024 பொதுத் தேர்தலை இப்போதுள்ள முறையில் வாக்குப்பதிவு எந்திரத்தால் நடத்தக்கூடாது.
100 சதவீத வாக்குப் பதிவு எந்திரங்களும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தாமளிக்கும் வாக்குக்கு ஒப்புகை சீட்டைப் பெற்று அதைச் சரி பார்த்து, வேறு ஒரு பெட்டியில் இட வேண்டும். தேர்தல் முடிவானது அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதன் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு ஒன்றிய அரசையும், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறது.

11.விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வருக

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத்தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன. இதனால் ‘எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்ற அரசியல் சமத்துவம் எட்டப்படாத நிலை உள்ளது. எனவே, இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதை பரிந்துரைசெய்துள்ளது.இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்த பலரும் அதை வலியுறுத்தியுள்ளனர். இந்திய சட்ட ஆணையமும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்து 1999 ஆம் ஆண்டு விரிவான அறிக்கை ஒன்றை இந்திய ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. அவற்றின் அடிப்படையில் 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும், 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும்தேர்வுச் செய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் கொண்டுவர வேண்டுமென ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!

2026 ஆம் ஆண்டோடு இப்போதுள்ள தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு செய்யப்படும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இப்போதே வந்துவிட்டது. மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, தொகுதிகள் பிரிக்கப்படுவதால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் குறையும் எனத் தெரிகிறது.
இதனால், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இதனால் மாநிலங்களுக்கு இடையே சமத்துவமற்ற நிலை உருவாகும். இதைத் தவிர்க்க மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றத் தாழ்வற்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாமல் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அளிக்கவேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து: தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 இரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாகவும், கூட்டாட்சி முறைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் அந்த தீர்ப்பு அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம், அவ்வாறு கலைத்த பின்பு ஆளுநர் ஆட்சியின் கீழ் இருக்கும் அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கலாம் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானதாகும். எனவே இந்தத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இம் மாநாடு வேண்டுகோள் விடுகிறது. பாஜக அல்லாத மாநில அரசுகளும் அவ்வாறு சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14.நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை செயல்படுத்துக!

2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 575 நீதிபதிகளில் 67 பேர் ஓபிசி பிரிவினர் அதாவது 11.65% ; 17 பேர் மட்டுமே எஸ்சி வகுப்பினர் அதாவது 3% பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 9 பேர், அதாவது 1.56% ; சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் 18 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது 3.13 % ஆகும். மீதமுள்ள சுமார் 80% பேர் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள். நீதிபதி நியமனத்தில் இருக்கும் இந்த சமூக ஏற்றத்தாழ்வு நீதிமன்றத் தீர்ப்புகளிலும் எதிரொலிக்கிறது.
இந்த அநீதி பற்றிக் கேட்டால், “உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 217 மற்றும் 224 அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதில் இட ஒதுக்கீடு எதுவும் இல்லை” என பாஜக அரசு கூறி தப்பித்துக்கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கொலேஜியம்தான், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கிறது என்றாலும் நியமனம் செய்வது ஒன்றிய அரசுதான். தமது கட்சிக்காரர்களையும், ஆர்எஸ்எஸ் காரர்களையும் நீதிபதிகளாக நியமிப்பதில் ஆர்வம் காட்டும் ஒன்றிய பாஜக அரசு சமூக நீதியைப் பாதுகாப்பதில் எந்த அக்கறையையும் காட்டுவதில்லை.
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்யும் தற்போதைய கொலேஜியம் முறை சமூக நீதியைக் காப்பாற்றுவதிலும், பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதிலும் தோல்வி அடைந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நீதிபதி நியமனங்களில் சமூக நீதியை, பன்மைத்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

15.உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலேஜியம் பரிந்துரைக்கிறது. அதில் எவரை ஒன்றிய அரசு ஏற்கிறதோ அவரை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் மாநில அரசின் ஆலோசனை கேட்கப்படவேண்டும் என்ற நடைமுறை இருந்தாலும் அது கொலேஜியத்தால் எல்லா நேரங்களிலும் ஏற்கப்படுவதில்லை. மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான வழக்குகளில் ஒன்றிய அரசின் மேலாதிக்கத்தைக் கவனத்தில்கொண்டே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
நதிநீர்ப் பங்கீடு போன்ற மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மக்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை. எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதலான நீதி நிர்வாக அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 217, 222, 223, 224, 224 ஏ ஆகியவற்றில் திருத்தம் செய்யப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

16.வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்திடுக!

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1) கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப் பேரவைகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிற மசோதாக்கள், நிறைவேற்றப்படும் சட்டங்கள்; குடியரசுத் தலைவர்,ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டங்கள்; அரசியலமைப்புச் சட்டப்படி வெளியிடப்படும் ஆணைகள், விதிகள், கொள்கைகள், ஒழுங்காணைகள் யாவும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், ஒரு மாநிலத்தின் ஆளுநர் உரியவிதத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்தியையோ அல்லது வேறு எந்த மொழியையோ அந்த மாநிலத்தில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம் என அதே பிரிவு 348 ன் உட்பிரிவு 2 தெளிவுபடுத்துகிறது.ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட பல இந்திய மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநில மொழிகளை தங்கள் உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகக் கொண்டு செயல்படுகின்றன.இந்திய குடியரசில் இடம்பெற்றுள்ள மாநிலம் ஒன்று தனது எல்லைக்குள் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தனது மாநில மொழி இருக்கவேண்டும் என சட்டம் இயற்றினால் அதற்கு ஒப்புதலோ மறுப்போ தெரிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது. அந்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்தவொரு அதிகாரத்தையும் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. எனவே ஒன்றிய அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைப் பெறவேண்டிய தேவை இல்லை. 1965 இல் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவே உச்சநீதிமன்றத்தை இந்தப் பிரச்சனையில் அனுமதி கேட்கக் காரணம்.எனவே, 1965 ஆம் ஆண்டு அமைச்சரவைக் குழுவின் முடிவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்கவேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

17.ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெறுக!

“ஒரே நாடு ஒரே வரி’ என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்பட்டிருக்கும் ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மாநில அரசுகளின் நிதித் தற்சார்பை முற்றாக அழித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடு செய்வதற்காக மாநில அரசுகளுக்கு அளித்த இழப்பீட்டையும் ஒன்றிய அரசு 2022 ஆம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது. ஒரே வரி எனக் கூறப்பட்டாலும் பல அடுக்கு வரிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமின்றி செஸ், சர்சார்ஜ் எனக் கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகின்றன. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய கடுமையான வரிவிதிப்பு முறை கிடையாது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இப்போதுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறவேண்டுமெனவும், அதற்கு மாற்றாக மாநில அரசுகளின் ஒப்புதலோடு வேறு முறையைக் கொண்டுவர வேண்டுமெனவும் ஒன்றிய பாஜக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

18.ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்!

ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும். மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.
மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என இந்தியா கூட்டணியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

19.ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதைக் கைவிடுக!

ஒரு மாநிலத்தில் கல்வியை நிர்வகிப்பதில் ஆளுநருக்கு எந்த பங்கும் கிடையாது. அவருக்கு அப்படியான அதிகாரத்தை அளிக்கவேண்டுமென எந்த ஒரு சட்டமோ, நீதிமன்ற தீர்ப்போ இல்லை. மாநில பல்கலைக்கழக சட்டங்கள்தான் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கின்றன. துணைவேந்தரை நியமிப்பது தொடர்பான அதிகாரத்தையும் அவர் கையில் வழங்குகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 163 (1) இன் கீழ் ஆளுநருக்கு இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பூஞ்ச்சி ஆணையம் தெளிவான பரிந்துரையை முன்வைத்துள்ளது. ஒரு ஆளுநர் தனது அரசியல் அமைப்புச் சட்டக் கடமைகளை நியாயமாகவும் பக்கச்சார்பு இல்லாமலும் செய்ய வேண்டுமென்று சொன்னால், அரசியலமைப்புச் சட்டத்தில் அவருக்கு அளிக்கப்படாத அதிகாரங்களை, பொதுவெளியில் விமர்சனங்களைக் கொண்டுவரக்கூடிய பணிகளை அவர் மீது சுமத்தக்கூடாது. ஆளுநருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்கும் மாநில சட்டங்கள் அத்தகைய தன்மை கொண்டவையாகும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரை நியமித்து அவருக்கு அதிகாரம் கொடுப்பதன் வரலாற்றுப் பொருத்தம், இப்போது இல்லை. பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதில் இயல்பாகவே அமைச்சரவைக்குத் தான் ஆர்வம் இருக்கும். எனவே அதிகாரப் போட்டியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துவது தேவையற்றது. ஆளுநருக்கு மாநில அரசுகள் இத்தகைய அதிகாரங்களை வழங்குவது தேவையற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டவற்றோடு அவரது கடமை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.” எனத் தெளிவாகக் கூறியுள்ளது. ஆளுநர் பதவி முற்றாக ஒழிக்கப்படும் வரை பூஞ்ச்சி ஆணையத்தின் பரிந்துரைப்படி ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கும் முறையைக் கைவிடவேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.

20.பதினாறாவது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்டுக!

மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்து அளிப்பதில் 14ஆவது நிதிக் குழு 42% 15ஆவது நிதிக்குழு 41% மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன. ஆனால் ஒன்றிய அரசோ பல்வேறு முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி மாநிலங்களுக்கு தர வேண்டிய வரி வருவாய் பகிர்வை குறைத்தது 14ஆவது நிதி குழு காலத்தில் 35% 15 வது நிதி குழு காலத்தில் வெறும் 30% விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது. பகிர்ந்து அளிப்பதை தவிர்ப்பதற்காக செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளை விதித்து மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிதியை ஒன்றிய அரசு குறைத்தது.
அதுமட்டுமின்றி பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கும் கல்விக்குமான ஒதுக்கீட்டைப் பெருமளவில் குறைத்தது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறைவாக வரி செலுத்தும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியைப் பகிர்ந்து அளிப்பதும் அதிகமாக வரி செலுத்தும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குக் குறைவாக நிதி அளிப்பதுமான கணக்கிட்டுமுறை ரத்து செய்யப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த மாநிலங்களை வஞ்சிக்கும் வரி பகிர்வு விகிதத்தை ரத்து செய்து அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பில்லாத விதத்தில் வரிப்பகிர்வு செய்யப்பட வேண்டும் அதற்கான முறையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு முன்வைக்க வேண்டும். நிதிப் பகிர்வில் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து 16 ஆவது நிதிக் குழுவில் நிதிப் பகிர்வு நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 (3) உட்பிரிவு (a) படி நிதி ஆணையம்தான் ஒன்றிய அரசின் வரி வருவாயை எந்த விகிதத்தில் மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவது என முடிவுசெய்கிறது. இந்த நடைமுறை ஒழிக்கப்படவேண்டும். வரியை வசூலிப்பதற்கு மாநில அரசு, செலவுசெய்வதற்கு மட்டும் ஒன்றிய அரசு என்ற நிலை மாற்றப்படவேண்டும். ஒன்றிய அரசின் வரி வருவாயில் 75 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வகை செய்யவேண்டும். அதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

21.மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் மத்திய பட்டியல் மாநிலப் பட்டியல் ஒத்திசைவுப்பட்டியல் என அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது:
மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து செயல்படுத்தப் பணிக்கும் விதமாக சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரமளிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 154, 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் (Residuary Powers) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.மாநிலங்களுக்கு சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க அதிகாரமளிக்கும் பிரிவுகள் 256, 257, 339(2), 344 (6) ஆகியவை நீக்கப்படவேண்டும்.
பொதுப்பட்டியல் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்கவேண்டும். பொதுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என ஆக்கப்படவேண்டும். அதற்கேற்ப பிரிவு 254 திருத்தப்படவேண்டும்.
மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற பிரிவு 213 (1) நீக்கப்படவேண்டும்.
மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் பிரிவு 249 நீக்கப்படவேண்டும்.
சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்குப் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற சட்டப் பிரிவு 169 திருத்தப்படவேண்டும்.
வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான அதிகாரம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

22. சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை நிறுத்தவேண்டும்

சட்டம் ஒழுங்கைப் பேணுவதும், காவல்துறை அதிகாரமும் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய அரசிடமிருக்கும் சிபிஐ என்னும் புலனாய்வு அமைப்பு மாநிலத்தில் ஒரு வழக்கை விசாரிக்கவேண்டுமெனில் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும், அல்லது நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்படவேண்டும் என்ற விதி உள்ளது.
மாநில அரசின் காவல்துறை அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் விதமாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உருவாக்கப்பட்டிருக்கிறது. முது மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகும்.
மாநில அரசின் காவல்துறை அதிகாரத்துக்கு எதிராக உள்ள தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ அமைப்பைக் கலைக்கவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே விட்டுவிட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. எந்தவொரு சட்டப் பின்புலமும் இல்லாமல் செயல்பட்டுவரும் சிபிஐ அமைப்பு கலைக்கப்படவேண்டும். அது தொடர்பாக பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.
மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் பிரிவு 257 ஏ நீக்கப்படவேண்டும்.

23. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிடுக !

தனியார்மயமும், தாராளமயமும் அதிகரித்துள்ள நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி, ஓபிசி வகுப்பினர் வேலை பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களே அங்கு பெரும்பாலான வேலைகளைப் பெறுகின்றனர். தமது சேமிப்பையெல்லாம் செலவழித்து கல்வி பெற்ற எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிகள் வேலையில்லாமல் அலைகின்றனர்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவது ஒன்றே இந்த சிக்கலைத் தீர்க்கும். எனவே, எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்குத் தனியார் துறையில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு உரிய சட்டத்தை இயற்றவேண்டுமென ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

24. வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக!

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. இதில் சுமார் 2 கோடி பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்காகத் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

25.அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிடுக!

தற்போது பிரதமரை உள்ளடக்கி 29 கேபினட் அமைச்சர்களும் சுதந்திரமான அதிகாரம் கொண்ட இணை அமைச்சர்கள் 3 பேரும்; 44 இணை அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக 76 அமைச்சர்களைக் கொண்டதாக இந்திய ஒன்றிய அமைச்சரவை விளங்குகிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் 16.2% மற்றும்  8.2% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால் கேபினட் அமைச்சர்கள் 29 பேரில் 5 பேரும் இணை அமைச்சர்களில் 8 பேரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 
தற்போது கேபினட் அமைச்சர்களில் ஒருவர் மட்டும்தான் எஸ்சி வகுப்பைச் சார்ந்தவர் எனத் தெரிகிறது. அதுபோல கேபினட்டில் 2 எஸ்டி அமைச்சர்கள் இருக்கவேண்டிய இடத்தில் ஒருவர் மட்டும்தான் உள்ளார். 2021 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது 12 எஸ்சி அமைச்சர்களும், 8 எஸ்டி அமைச்சர்களும் இருப்பதாக பாஜக அரசால் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அதிகாரம் குறைவான இணை அமைச்சர்களாகவே நியமிக்கப்பட்டனர்.
இந்த குறைபாட்டுக்குக் காரணம் மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் அமைச்சரவையில் இட ஒதுக்கீடு இல்லை என்பதுதான். இதே நிலைதான் மாநில சட்டமன்றங்களிலும் நிலவுகிறது. வட்ட மேசை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின் போதே எஸ்சி மக்களுக்குச் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை இருந்தால் மட்டும் போதாது.
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் உரிமை வேண்டும் என புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்தினார். அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த ஆதிதிராவிட சமூகத் தலைவர்களில் ஒருவரான திரு வி.ஐ.முனிசாமி பிள்ளை அவர்கள் “மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கும்போது, அமைச்சரவையில் பிரதிநிதித்துவமும் அந்த விகிதத்தில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் ஒன்றிய அமைச்சரவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை. எனவே அமைச்சரவையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். மாநிலங்களவை உள்ளிட்ட மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டுமென இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

26. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுக

ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் 27.03.2018 அன்று வழங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்த்ரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் ஒன்ற இயற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதோடு அப்படி சட்டம் இயற்றும்வரை மத்திய மாநில அரசுகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.
அந்த நெறிமுறைகள் இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் அதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க ஒன்றிய அரசு ஆணவக் குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் ஒன்றை உடனே இயற்றவேண்டுமெனவும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

27. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பானதொரு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதித் திட்டம் ஆகும். 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, மகாத்மா காந்தி பெயரிலான இந்தத் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வெட்டிக் குறைத்துவிட்டது.
100 நாட்கள் வேலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படாததால் சராசரியாக 20 நாட்களுக்குத்தான் வேலை வழங்கப்படுகிறது. கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் துயரைத் துடைப்பதற்கும் இந்தத் திட்டம் உதவியாக உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துகொண்டுள்ள கோடிக் கணக்கானவர்களின் வேலை அட்டைகளை ஒன்றிய அரசு ரத்து செய்துவருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 3.06 கோடி பேரின் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. 2022-23 இல் சுமார் 7.43 கோடி பேரின் வேலை அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்தத் திட்டத்தில் பதிவு செய்துகொண்டிருப்பவர்களின் வேலை அட்டையோடு ஆதார் அடையாள அட்டையை இணைத்து ‘ஆதார் இணைப்புடன்கூடிய வேலை அட்டை – பரிவர்த்தனை (ABPS) முறை’ என்ற புதிய முறையை  ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. வேலை அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கெடு 2023 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அவ்வாறு இணைப்பதற்கான தொழில்நுட்ப வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அவ்வாறு இணைக்கமுடியாத மேலும் 7 கோடி பேரின் வேலை அட்டைகள் இப்போது ரத்து செய்யப்படவுள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் இந்தத் தாக்குதலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்; இந்தத் திட்டத்துக்கு முழுமையாக நிதி ஒதுக்கப்படவேண்டும்; நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்; ரத்து செய்த வேலை அட்டைதாரர்களை மீண்டும் பதிவில் சேர்க்கவேண்டும் என இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

28. கல்விக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்க!

1964 ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி) 6 சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. பாஜக ஆட்சி  அமைந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டே போகிறது. 2014- 15இல் அது 2.8% ஆக இருந்தது; அதற்கு அடுத்த ஆண்டில் அது 2.4% ஆகக் குறைந்தது. 2017 -18 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% மட்டுமே கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது நிதிப் பற்றாக்குறைதான் என்பதை புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை சரியாகஅடையாளம் கண்டுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் கல்விக்கான ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்படும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் அது எப்படி எட்டப்படும் என்று தெளிவுபடுத்தவில்லை. நிதிநிலை அறிக்கையில் ஜிடிபியில் 6 விழுக்காட்டைக் கல்விக்கு ஒதுக்கவேண்டுமென மைய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

29. நீட் தேர்வை இரத்து செய்க, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக!

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் விதமாக தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் கல்வி காவிமயப்படுத்தப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் சனாதன மையங்களாக மாற்றப்படுகின்றன. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் நீட் நுழைவுத் தேர்வு நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதுதான் இதற்கு நிரந்தரமான தீர்வாக இருக்கும்.
உயர் வகுப்பினருக்கே கல்வி என்னும் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகிற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

30.பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக!

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மண்டல துணை வட்டாட்சியரிடமும், ஆதிதிராவிடர்கள் வட்டாட்சியரிடமும் விண்ணப்பித்து தங்களுக்குக்கான சாதிச் சான்றினை 15 நாட்களுக்குள் பெறமுடிகிறது.
பழங்குடியினர் என ஏமாற்றி சிலர் சாதிச்சான்று பெறுவதைத் தடுக்கும் பொருட்டு, பழங்குடியினருக்கு மட்டும் வருவாய் கோட்டாட்சியர் சாதிச் சான்று வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசு 1989ல் உத்தரவிட்டது. இதன்பின்பு பழங்குடியினர் சாதிச் சான்றுக்காக ஆண்டுக்கணக்கில் அலையவேண்டியதாயிற்று. 1999ல் ஆ.தி & ப.ந. துறை அரசு ஆணை 31-ஐ வெளியிட்டது. அதன்படி பழங்குடியினருக்கு, விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் சாதிச் சான்று வழங்கப்படவேண்டும். அந்த ஆணையை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை.
சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகள் மூலமாக மேற்படி சான்றிதழ்களை வழங்கும் புதிய முறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக 1999, 2011 இறுதியாக 2012ல் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை 184 ஐ வெளியிட்டுள்ளது. அரசு ஆணை 184-ன்படி தற்போது அனைத்து மாணவர்களுக்கும் 6-ஆவது வகுப்பிலேயே சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பழங்குடி மாணவர்களுக்கு இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் மட்டும் வழங்கப்படுகின்றன. சாதிச் சான்றுகள் எளிதில் வழங்கப்படுவதில்லை. சாதிச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் பழங்குடியினரிடம் சில அதிகாரிகள், “போதிய ஆதாரம் இல்லை” என்று கூறுகின்றனர். அதற்காகவே 2013-ல் அப்போதைய ஆ.தி.&ப.ந.துறைச் செயலாளர் கண்ணகி பாக்கியநாதன் அவர்கள் தொடர்புடைய அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு போட்டுள்ளார். சாதியைத் தெரிந்துகொள்ள, அந்தந்த பகுதிகளில் உள்ள மானுடவியல் பேராசிரியர்களின் உதவியைப் பெற்று சாதிச்சான்று வழங்கலாம் என உத்திரவிட்டுள்ளார்.
மாவட்ட அளவில் சாதிச் சான்றுக்காக ஆயிரக்கணக்கான பழங்குடியினர் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் பழங்குடியினருக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. மேலும் மாணவ, மாணவிகளின் கல்வி, வேலை வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே, பிறசாதி மாணவர்களுக்குப் பள்ளி மூலமே சாதிச்சான்று வழங்கப்படுவது போன்று, பழங்குடியின மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனவும், அரசு ஆணையின்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பழங்குடியினருக்குச் சாதிச் சான்று வழங்கப்படவேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

31. பழங்குடியினரைக் கொத்தடிமையில் ஈடுபடுத்துவதைத் தடுத்திடுக!

இந்தியாவில் நான்கு லட்சம் பேர் கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக ஒரு கணக்கெடுப்பின் மூலமாக வந்துள்ளது. இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாக செங்கல் சூளை, மாட்டுப் பண்ணை, விவசாய வேலை, அரசி ஆலை, கல்குவாரிகள், பஞ்சு ஆலைகள், பீடி சுற்றுதல், பட்டு நெசவு, கை நெசவு, தேயிலைத் தோட்டம், பூந்தோட்டம், கயிறு திரித்தல், கட்டிடத் தொழில், உப்பள, தீப்பெட்டித் தொழில் போன்றவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்தொழிலில் மக்களை ஈடுபடுத்துவதற்கான இடைத்தரகர்களும் ஏராளாமானோர் உள்ளனர்.
இவ்வாறு கொத்தடிமையாகச் செல்கின்ற பழங்குடி இருளர்கள் மீது மனிதத் தன்மையற்ற வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. பாலியல் வன்கொடுமை, கொலை, உழைப்புச் சுரண்டல், உரிய கூலி வழங்கப்படுவதில்லை. சொத்து மற்றும் உடைமைகள் பறிக்கப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவரைக் கொத்தடிமையாக வைத்திருப்பதை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குற்றச்செயலாகக் கூறியுள்ளது.
எனவே, பழங்குடியினரைக் கொத்தடிமையில் ஈடுபடுத்துவோர் மீது வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் உள்ளபடி மறுவாழ்வு திட்டங்களைப் பழங்குடியினருக்கு வழங்கவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

32.வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுக!

திட்டமிட்டு தூண்டப்படும் வகுப்புவாத வன்முறைகளைத் தடுப்பதற்காகவும்; வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும்; வகுப்புவாத வன்முறை நிகழப்போவது தெரிந்திருந்தும் அதைத் தடுக்காமல் தனது கடமையைச் செய்யத் தவறும் அரசு அதிகாரிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துத் தண்டிப்பதற்காகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சட்ட மசோதா ஒன்று உருவாக்கப்பட்டது.
“குறிவைத்து ஏவப்படும் வன்முறைகள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் தடுப்பு மசோதா (PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE (ACCESS TO JUSTICE AND REPARATIONS) BILL, 2011) என்ற மசோதா உருவாக்கப்பட்டது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்ததுபோல மாநில அரசு ஒன்றே வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்ற முயற்சித்தபோது அதை பாஜகவும் அதன் ஆதரவு கட்சிகளும் எதிர்த்தன. அதிமுகவும் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த மசோதா சட்ட வடிவம் பெற முடியவில்லை.
வெறுப்புப் பிரச்சாரத்தையோ, வெறுப்புக் குற்றங்களையோ தடுப்பதற்கென்று சிறப்புச் சட்டம் எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, “குறிவைத்து ஏவப்படும் வன்முறைகள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் தடுப்பு சட்டத்தை உடனடியாக இயற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

33.வெல்லும் சனநாயகம்!

இந்திய பாராளுமன்ற சனநாயகமுறைக்கு ஒன்றிய பாஜக அரசால் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சனநாயகத்தின் நான்கு தூண்களான சட்டம் இயற்றும் அவைகள், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம்யாவும் இன்று நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தன்னாட்சி பெற்ற சனநாயக அமைப்புகள் பாஜகவின் பெரும்பான்மை வாத அரசியலால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கருத்துரிமை பறிக்கப்பட்டு பாஜக அரசுக்கு எதிராக எவர் பேசினாலும் அவரைச் சிறையில் அடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை முதலானவற்றின் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றன. மதவெறியூட்டப்பட்ட கும்பல்கள் ஊக்குவிக்கப்பட்டு கும்பல் வன்முறை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நிகழ்த்தப்படுகிறது. எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி. மதச் சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோர் ஒன்றிய பாஜக அரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் கூட்டாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக கோடிக்கணக்கான மக்கள் மீது செஸ், சர்சார்ஜ் என ஈவிரக்கமற்ற கூடுதல் வரிகள் சுமத்தப்படுகின்றன. பண வீக்கத்தின் காரணமாக விலைவாசி உயர்ந்து நடுத்தர மக்களும் அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். வேலை இல்லா திண்டாட்டம் முன் எப்போதையும்விட அதிகரித்திருக்கிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்துத் தளங்களிலும் இந்தியா பின்னோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது.
பெரும்பான்மை மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் இன்றைய பாஜக ஆட்சியினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தைச் சார்ந்தவர்களே ஆவர். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி என இந்து சமூகத்தின் பெரும்பான்மை மக்கள்தான் இந்த ஆட்சியின் கொள்கைகளால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆட்சியாளர்கள் தமது தோல்விகளை மறைத்துக் கொள்வதற்காகவே மத வெறியைத் தூண்டுகின்றனர். இந்த பொய்யும் புரட்டும் நீண்ட நாள் நீடிக்காது அதற்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்திய மக்கள் தமது கையில் உள்ள ‘வாக்குரிமை’ என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்குக் கேடாக உள்ள இன்றைய பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களின் பொய்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் விழிப்படைந்து விட்டனர். அவர்கள் பாஜகவினருக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.
சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம் ! சனநாயக அரசை நிறுவுவோம்!என சபதம் ஏற்க அனைத்து சனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்!

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response