ஆளுநர் ஆர்.என்.இரவி தப்பு செய்கிறார் – உச்சநீதிமன்றம் சூடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டன்.

அவற்றில், தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாகக் கால தாமதம் செய்து வருகிறார். இதனால் அரசுத் திட்டங்கள் அனைத்தும் பாதிக்கின்றன. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதே போன்று, மற்றொரு மனுவில், தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத்திற்குப் புறம்பான விசயங்களைச் செய்கிறார்.மாநில அரசின் கருத்துகளை ஏற்க மறுக்கிறார். குறிப்பாகப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என்.இரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என்.இரவிக்குச் சரமாரி கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரின் வாதத்தில், ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களை சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதுகுறித்து தமிழக அரசுக்கோ, சட்ட மன்றத்துக்கோ அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் இதுபோன்று செயல்படுகிறார். தமிழக ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது எனத் தெரிவித்தனர்.

இதன் போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி, ‘அரசியல் சாசனத்தின் 200 ஆவது விதிகளின் படி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஜனாதிபதிக்கோ, திருப்பி அனுப்பவோ அவருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘குடியரசுத் தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியது தமிழ்நாடு அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதா? இல்லையா?’ என்றார்.

அதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறித்து முறையாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முதலில் சட்டமன்ற மசோதாக்களை மறு பரிசீலனை செய்யத் திரும்ப அனுப்பினார். ஆனால் சட்டமன்றம் அவரது ஆலோசனையை ஏற்கவில்லை, எனவே தற்போது மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

அப்போது மீண்டும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, ‘மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். முதல் முறையே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கலாம். கிடப்பில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டு, சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், ஆளுநர் தரப்பு குழப்பத்தில் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் சாசன பதவியில் இருப்பவரைக் கையாளுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் எதிலும் சட்ட நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாகும். அதனால் தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையிலான பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆளுநரிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தைச் செயலழிக்கச் செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரமில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறீர்கள். ஆளுநர் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்புச் சட்டப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நாமினி தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்களை முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் இரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பின், வழக்கின் விசாரணை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Response