சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 2023 ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.இரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்துவிட்டார்.
தமிழ்நாடு அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் இன்று (சனவர்.5) தீர்ப்பு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியானதே. எனவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.