திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2018- ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து சுரேஷ்பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், அப்படி விசாரிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.3 கோடி இலஞ்சம் தரவேண்டும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. முடிவாக, ரூ.51 இலட்சம் தருவதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கான முதல் தவணையாக அமலாக்கத் துறை அதிகாரியிடம் கடந்த மாதம் ரூ.20 இலட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2 ஆவது தவணையாக ரூ.20 இலட்சம் வழங்குவதற்காக அமலாக்கத் துறை அதிகாரி சொன்னபடி திண்டுக்கல் புறவழிச்சாலை தோமையார்புரம் பகுதியில் உள்ள விடுதி அருகே மருத்துவர் சுரேஷ்பாபு நேற்று காலை சென்றுள்ளார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கும் அவர் தகவல் கொடுத்திருந்தார். இதன்பேரில், இலஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் மறைவாகக் காத்திருந்தனர்.
அப்போது, மத்திய பிரதேச மாநில பதிவெண் கொண்ட மகிழுந்தின் பின் பகுதியில் அந்தப் பணத்தை வைத்துவிட்டுச் செல்லுமாறு மருத்துவரிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, மருத்துவரும் பணத்தை வைத்துவிட்டுச் செல்ல,அந்த மகிழுந்தை ஒருவர் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
சிறிது தூரத்திலேயே இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த மகிழுந்தை மறித்துள்ளனர். ஆனால், அது நிற்காமல் திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றது.
இலஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனே கொடைரோடு சுங்கச்சாவடிக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சுங்கச்சாவடியில் கார் நிறுத்தப்பட்டது. பின்தொடர்ந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மகிழுந்தை மறித்து அதில் இருந்தவரைப் பிடித்தனர்.மகிழுந்தில் இருந்த ரூ.20 இலட்சத்தைக் கைப்பற்றினர்.
பிடிபட்டவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அமலாக்கத் துறைஅதிகாரி அன்கித் திவாரி என்பதும், சில மாதங்களுக்கு முன்புதான் இடமாறுதலாகி வந்து தமிழகத்தில் பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்தது
பின்னர், திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு தென்மண்டல எஸ்.பி. சரவணக்குமார், டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் ரூபா கீதாராணி ஆகியோர் அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பிறகு, அன்கித் திவாரியை இலஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பு இரவு 10 மணிஅளவில் ஆஜர்படுத்தினர்.
இடமாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே இதுபோன்று தனி ஒரு அதிகாரி செயல்பட வாய்ப்பு இல்லை என்பதால், இதன் பின்னணியில் வேறு சில அமலாக்கத் துறை அதிகாரிகளும் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்தும் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ஏற்கெனவே இலஞ்சமாகப் பெற்ற ரூ.20 இலட்சத்தில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் சிலருக்கும் அன்கித் திவாரி பிரித்துக் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், இதுபோன்று பலரையும் மிரட்டி, கோடிக்கணக்கில் வசூலித்து உயர் அதிகாரிகளுக்குப் பிரித்துக் கொடுத்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு இலஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை நடத்திய போதும் துணை இராணுவப் படை குவிக்கப்பட்டு சோதனைக்கு இடையூறு செய்யப்பட்டது.
இப்போது சென்னையிலும் துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒன்றிய அரசு தப்பு செய்யும் தமது துறை அதிகாரிகளைக் காப்பாற்றப் போராடுகிறது என்கிறார்கள்.