ஒன்றிய அமைச்சர் மகனின் வீடியோவை மோடி பார்க்கவில்லையா? – இராகுல் கேள்வி

மத்தியபிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.இதனால் அங்கு தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது.

ஹர்தா நகரில் நேற்று காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல்காந்தி பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

ஒன்றிய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மகன் தேவேந்திரா தோமர் விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பணத்தைத் திருடுவது போன்ற காணொலி வெளியாகி உள்ளது. அவரிடம் விசாரிக்க அமலாக்கத்துறையை மோடி அரசு அனுப்பியிருக்கிறதா?

ம.பி.யில் உள்ள பாஜக அரசு 50 சதவீத கமிசனில் வேலை செய்கிறது. எல்லாவற்றிலும் ஊழலில் ஈடுபடுகிறது. விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பணத்தை எந்தவிதப் பயமும் இல்லாமல் அச்சமின்றி, வெளிப்படையாக வீடியோ அழைப்பு மூலம் திருடும் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனின் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மோடி இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி., துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மபியில் 27 இலட்சம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வேலையை அப்போதைய முதல்வர் கமல்நாத் தொடங்கிய பின்னர், பெரிய தொழிலதிபர்களுடன் கூட்டு சேர்ந்து பாஜக வீழ்த்தியது. இதனால் பாஜக ஆட்சியில் 18,000 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதானி போன்ற தொழிலதிபர்களின் நலனுக்காக பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் நாட்டின் சாதாரண குடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு கறுப்புப் பணத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் என்று பாஜக அரசு கூறியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மபியில் 500 தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாகப் பொய் கூறுகிறார்.

பாஜக தலைவர் ஒருவர் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்து, வீடியோ எடுத்தார். அது வைரலாகும். அவர்கள் வெட்கமற்றவர்கள். அவர்களின் சிந்தனை இந்த வீடியோவில் மறைந்துள்ளது.பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களாக மாற வேண்டும் என்று காங்கிரசு விரும்புகிறது, ஆனால் பாஜக அவர்களை ஆங்கிலக் கல்வியிலிருந்து விலக்கி வைக்க விரும்புகிறது. பாஜக தலைவர்கள் தங்கள் மகன்களும் மகள்களும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பழங்குடியினர் படிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response