யாசகம் கேட்கவில்லை – கனிமொழி ஆவேசம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ அக்டோபர் 14,2023 சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,மக்களவை உறுப்பினரும் திமுகவின் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் கனிமொழி பேசியதாவது….

பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை,பெண்களுக்கு மாதம் ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை ஆகியவற்றை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் 11 பெண் மேயர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசில் ‘நாரி சக்தி’ என்று பெண்களின் சக்தி குறித்து பிரதமர் மோடி பொய் புரட்டுகளைச் சொல்லிக்கொண்டு இருப்பார்.

2010 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியின் வலியுறுத்தலின் பேரில் திமுக ஆதரவாடு மகளிர் மசோதா மாநிலங்கவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவர எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், மகளிர் மசோதாவை கொண்டு வந்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலுக்காகப் பெண்களை ஏமாற்றத் துடிக்கிறது பாஜக.

பாஜக ஆட்சியில் நாட்டில் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. மணிப்பூர் முகாம்களில், பெண்களும், குழந்தைகளும் வாழமுடியாத நிலையில், வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதே பாஜக, குஜராத்தில் செய்த அட்டூழியங்களால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மறக்கமுடியாது. மதக் கலவரங்கள், காழ்ப்புணர்வு அரசியல், வெறுப்பு அரசியல் என அனைத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் பதவிவிலகல் கடிதம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ‘தலித் என்பதால் பதவி விலக வற்புறுத்தப்பட்டிருக்கிறேன்.’ என அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராடினார்கள். குடியரசுத் தலைவராக இருக்கட்டும், வீராங்கனைகளாக இருக்கட்டும், அமைச்சராக இருக்கட்டும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையைதான் பாஜக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 43 விழுக்காடு பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் 2016-17 இல் 16 விழுக்காடு பெண்களே வேலைக்குச் சென்றார்கள். இன்று அது எட்டு விழுக்காடாகக் குறைந்துள்ளது. கல்வி இல்லை, எதிர்காலம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்ற நிலையைத்தான் பாஜக பெண்களுக்கு உருவாக்கியுள்ளது.

பெண்கள் 50 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ளார்கள். ஆனால், திட்டங்கள் எதிலும் பெண்களின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை. பெண்கள் ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. நாங்கள் யாசகம் கேட்கவில்லை எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response