இராகுல்காந்திக்கு பாஜக தலைவர் பாராட்டு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், நாகா, குக்கி பழங்குடி பிரிவினருக்கும் மே 3 ஆம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை ஓயவில்லை. இந்த மோதலில் பொதுமக்களில் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் குவித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று 4 நாள் தங்கி சமரச முயற்சி மேற்கொண்டும், மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிப்பூர் சென்றார்.

அப்போது; வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து இராகுல் காந்தி ஆறுதல் கூறினார். சாலை மார்க்கமாகச் செல்லத் தடை விதித்த போதிலும் ஹெலிகாப்டர்களில் சென்று முகாம்களில் தங்கி இருந்தவர்களை இராகுல் காந்தி சந்தித்தார்.

இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதே சமயம் தற்போதைய சூழ்நிலையில் இராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தைப் பாராட்டுவதாக அம்மாநில பாஜக தலைவர் சாரதா தேவி தெரிவித்துள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response