9 ஆண்டு மோடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்தவை இவைதாம் – அமித்ஷா பட்டியல்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றார்.

அவரை புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, அப்போலோ மருத்துவமனைகள் குழும செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட 24 முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர்.

தொடர்ந்து, நேற்று வேலூர் சென்ற அமித் ஷா, அங்கு நடந்த சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசியபோது,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்?. அதனைப் பட்டியலிட முடியுமா? என்று கேட்கிறார். காதுகளை நன்றாக திறந்து வைத்து நான் சொல்லப் போகும் பட்டியலைக் கேளுங்கள். தைரியம் இருந்தால் நாளை எனக்கு இதற்கு பதில் கூறுங்கள்.

2004-14 வரை உங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. 9 ஆண்டு மோடி ஆட்சியில் ரூ.2.47 இலட்சம் கோடி கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,352 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 3,719 கி.மீ சாலை ரூ.58 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் 105 கி.மீ தொலைவுக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை, ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை – பெங்களூரு விரைவு சாலை தயாராகி வருகிறது. சென்னை மெட்ரோ பகுதி-1, 2 திட்டத்துக்காக ரூ.72 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி இரயில் நிலையங்கள் ரூ.3,500 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளன. ரூ.1,260 கோடியில் சென்னை விமானநிலைய முனையம் திறக்கப்பட்டுள்ளது. 56 இலட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தரப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் 84 இலட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 62 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.கோவையில் ரூ.1,500 கோடியில் இஎஸ்ஐ மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் ஏன் திறக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நான் இந்தக் கேள்வியை அ.தி.மு.க.வினருக்குக் கேட்க விரும்புகிறேன். ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் திறக்கவில்லை என்று அ.தி.மு.க.வினர்தான் பதில் அளிக்க வேண்டும். மத்தியில் 18 ஆண்டுகளாகக் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு ஏன் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையில் பகுதி-1,2 பணிகள் தொடங்கி விட்டன. கோவையில் ரூ.1,500 கோடி செலவில் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response