தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது – பாவலரேறு நினைவுநாள் பதிவு

11-6-1995.
பாவலரேறு ஐயா மறைவுற்று 28 ஆண்டுகள் ஓடிவிட்டன.

1959
26 ஆம் அகவையில் தென்மொழி இதழைத் தொடங்கிய காலத்திலிருந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பொது வாழ்க்கை தொடங்குகிறது.

அதற்கு முன்பாகக் கொய்யாக்கனி – என்னும் பாவியத்தையும், நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியிருந்ததோடு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றிய போதிலும் தென்மொழி தொடங்கிய பின்பே ஐயாவின் களப்பணி தொடங்கியது.

ஆரிய சமசுக்கிருதத்தின் ஆளுமையிலிருந்து அருந்தமிழை மீட்க வேண்டும் என்கிற நோக்கில் இருந்த மொழிஞாயிறு ஐயா பாவாணர் அவர்களின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருகிற முயற்சிகளுக்காகத் தென்மொழி தொடங்கப்பட்டிருந்தாலும், பின்னர் தமிழ்மொழி, இன, நாட்டுரிமைகளை முன்னிறுத்தியே பாவலரேறு முழுமையாகச் செயற்பட்டார்.

காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்த காலம் என்றாலும்,அதற்கு மாற்றாய், இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்தில் இருந்த திமுகவின் நோக்க நடைமுறைகள் தீர்வைத் தர இயலாது என்றும், தமிழ்நாட்டு விடுதலை ஒன்றே தீர்வாகும் என்றும் பாவலரேறு தொடக்கத்திலேயே முன்வைத்தெழுதியவர். செயற்பட்டவர்.

தனித்தமிழ்நாடு, தமிழகம் பிரிதலே தக்கது, பிரிவினை நோக்கித் தள்ளப்படுகிறோம், விடுதலை பெறுவது முதல் வேலை, இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும் தமிழனின் விடுதலை எழுச்சியும்,பிரிவினை தவிர வேறு வழியில்லை, தமிழகப் பிரிவினை தேவையே – என்றெல்லாம் பல கட்டுரைகளை ஆசிரியவுரைகளாக எழுதித் தமிழக விடுதலையை வலியுறுத்தினார்.

தமிழும் தமிழரும் பிழைப்பதென்னில்
தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது!
ஆண்டு நூறானாலும்
அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை
எண்ணம் விலக்கோம்யாம்!
பூண்டோம் உறுதி
புறப்பட்டோம் என்றே நீ
மூண்ட இடியாய்
முழங்காய்த் தமிழ்மகனே!
விடுதலை வேண்டும் அது முதல் வேலை
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை.
பெற்றுவிட வேண்டும் விடுதலை பெற்றுவிடவேண்டும் தமிழகம் பெற்றுவிட வேண்டும்

– என்று நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதித் தமிழ் இளைஞர்களை எழுச்சிகொள்ள வைத்தார்.

தமிழக விடுதலைப் படை என்கிற ஒரு படை திரட்டலோடு தமிழ்நாட்டு விடுதலையை முன்னெடுத்தவர், 1969 இல் அதற்கான அமைப்புக் கூட்டத்தையும் கூட்டினார்.

1972, 1973, 1975 – மூன்று ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் தமிழக விடுதலைக்கென மாநாட்டை நடத்தி அதற்காக நூற்றுக்கணக்கானோர் சிறைபடும் நிலையில் செயல்பட்ட முதன்மையர் தமிழக வரலாற்றில் பாவலரேறு அவர்களே ஆவார்.

தாமே அமைப்பாளராக இருந்து தமிழக மக்கள் விடுதலை கூட்டணி – என்கிற முன்னணியைப் புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன், ஐயா ஆனைமுத்து, ஐயா சாலை இளந்திரையன், தோழர்கள் எசு என் நாகராசன், பொன் பரமேசுவரன் உள்ளிட்டவர்கள் சார்ந்த இயக்கங்களை ஒருங்கிணைத்துத் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன் முதலில் முன்னணியைக் கட்டி எழுப்பி வரலாற்றில் முதன்மை முன்னணியாக அடையாளப்படுத்தியவர்.

தமிழ்நாட்டு விடுதலை நோக்கச் செயற்பாடுகளுக்காகவும்..
தமிழீழ விடுதலை ஆதரவுக்காகவும்..
வேறு எவரினும் கூடுதலாகத் தம் வாழ்நாள் இறுதிவரைச் செயல்பட்டவர் பாவலரேறு ஐயா அவர்களே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையான ஆதரவு என்பது தமிழ்நாட்டு விடுதலைக்கான போராட்டமே என்று தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து அக்கருத்தை மிக வலிமையாக எடுத்துரைத்தார் பாவலரேறு.

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு விடுதலை கேட்டார் என்பதற்காக ‘மிசா’க் கொடுஞ்சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டவரும் பாவலரேறு ஒருவரே.

இந்தி எதிர்ப்புக்காகச் சிறை,
இந்திய எதிர்ப்புக்காக ‘மிசா’வில் சிறை,
தொடர்ந்து தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டங்களுக்காகச் சிறை,
தமிழீழ ஆதரவுக்காகச் சிறை,
ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே – என்று ‘தனு’வைப் பாராட்டி எழுதியதற்காகச் சிறை,
‘தடா’ வில் சிறை,
மனுநூல் எரிப்புக்காகச் சிறை..
தமிழ்வழிக் கல்விக்காகச் சிறை,
தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரி சிறை…
இப்படிப் பலமுறை சிறைப்படுத்தப்பட்டும்..
சிறை என்ன செய்யும்?
-என்றும்,

இதோ நான் ஒருவன் இருக்கின்றேன்.. என்னைச் சிறை செய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்
என்தலை கொய்யினும் கொய்க!

– என்றும் ஏறு நடை போட்டு எக்காளம் முழங்கியவர் பாவலரேறு.

ஐயை, கொய்யாக்கனி, நூறாசிரியம், உலகியல் நூறு – என்பவற்றின் தொடர்ச்சியாய் நூற்றுக்கணக்கான செவ்விலக்கியங்கள் படைக்கும் ஆற்றல் சான்றவர்.

தம் இலக்கிய உணர்வுகளையெல்லாம் அமைவாய் வைத்துவிட்டு.. எனக்கென எதுவும் இல்லை தமிழனின் இழிநிலை மாற்றம் தவிர.. என்று அவர் யாத்தவை.

ஆயிரக்கணக்கான பாடல்கள்,
ஆயிரக்கணக்கில் கட்டுரைகள்,
ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்..
தம் வாழ்நாள் முழுக்க
முன் புதையுண்ட எம் முத்தமிழ்ச் சிறப்பினை
மன்பதைக்கு உணர்த்தல் எம் மண்ணுயிர் வாழ்க்கை.

– என்று போராளியாய் வாழ்ந்தவர் பாவலரேறு.

தென்மொழியைக் கண்ணொளியை மூச்சுயுர்ப்பைச் சாகும்வரை தொண்டெனெவே ஆற்றிவருவேன்.
– என வாழ்நாளெல்லாம் தொண்டாற்றியவர்.

தமிழே எனக்கிங்கு
உயிர் மலர்ச்சி – என்றவர்,
தமிழே எனக்கிங்கு
உடலம் என்றும்,
உலகம் என்றும்,
இறைவன் என்றும்
தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டைத் தொழுதவர்..
மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை..

என்ற அவர்,

பெரியாரின் தமிழ்பற்றிய சில கருத்துகளைப் பெரியார் இருந்த காலத்திலேயே நேருக்கு நேர் கண்டித்து மறுத்திருந்தாலும்..

பெரியார் நம்மிடைப் பிறந்திராவிட்டால்..
நரியார் நாயகம் இங்கே நடந்திடும் – என்றும்,

திருவள்ளுவருக்குப் பிறகு
தமிழினத்தை மீட்க வந்த ஒரே தலைவர் பெரியார்தான் என்றும் தன் இறுதிக் காலம் வரை பெரியாரின் அரும்பணிகளை மெச்சிய நிலையில்.. பெரியாரின் இறப்பின்போது பாவலரேறு எழுதிய வரிகள்..
நினைக்கத் தகுத்தவை.

ஆம்..
உரியாரைப் போற்றுவதின் அவர் உரைத்த பலவற்றுள் ஒன்றையேனும்
சரியாகக் கடைபிடித்தால்
அடடா.. இத் தமிழ்நாடும்
சரியாதம்மா..
பாவலரேறுவை..
நினைக்கும்போதும்..
நாமும்..
அதையே நினைக்கின்றோம்..
ஆம்..
பாவலரேறு கொள்கைகளைச்
சரியாது
கடைபிடிப்போம்..
பாவலரேறு ஐயாவுக்கு
வீரவணக்கம்! செலுத்துவதோடு..
அவரின்..
தமிழ்த்தேச விடுதலைக் கொள்கை உணர்வை மங்கவிட்டுவிடாது…
தமிழ்த்தேசம் என்பது இந்திய அடிமை மாநில அரசாக இக்கால் இருக்கிற தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவது என்கிற அளவில் திரித்துப் பொருள் கருதி நீர்த்துப் போகச் செய்யாது.
தமிழ்நாட்டின் தேச விடுதலைக்குப் போராடுவோம்.

– பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி

Leave a Response