மே 18 தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு – சிங்கள அரசு செய்யவேண்டியதென்ன?

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், பொறுப்புக்கூறலும் இனப்படுகொலை அங்கீகாரமும்

வேண்டி மே 18, 2023 – பேர்ல் (PEARL)அமைப்பு, உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் இணைந்து 14 ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை இன்று கடைப்பிடிக்கிறது.

2009 ஆம் ஆண்டில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எனவும் அழைக்கப்படும் போரின் இறுதி மாதங்களில் இலங்கை அரசு, தமிழர்கள் மீது சட்டவிரோதமான கொலைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்குதல், எழுந்தமானமாகக் கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு உட்பட்ட பாலியல் வன்முறைகள் போன்றவற்றைப் புரிந்ததுடன் அவர்களுக்கு உணவு உள்ளடங்கலாக மனிதாபிமான உதவியையும் தடுத்தது. இந்த மீறல்களில் சில போர்க் குற்றங்களாகவும், மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவும், இனப்படுகொலையாகவும் அமைகின்றன. 40,000 தொடக்கம் 169,796 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது என்ன நடந்ததெனத் தெரியாத நிலையில் மரணமானதாகக் கருதப்படுகிறார்கள். இலங்கைப் படையினர் பாதுகாப்பு வலயங்கள் மீது வேண்டுமென்றே நடத்திய எறிகணைத் தாக்குதல்களாலேயே பெரும்பாலான இழப்புகள் ஏற்பட்டன.

2009 ஆம் ஆண்டின் பின்னரான ஒவ்வொரு மே மாதத்திலும் தமிழர்கள் நினைவுச் சின்னங்களை உருவாக்கியும், ஒன்றுசேர்ந்தும், முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்தோருக்குக் கிடைத்த ஒரேயொரு உணவான கஞ்சியை “முள்ளிவாய்க்கால் கஞ்சி” என அருந்தியும் இந்த இனப்படுகொலையை நினைவேந்துகிறார்கள்.

ஏராளமான சாட்சியங்கள் இருந்தபோதிலும் குற்றங்களைப் புரிந்தார்களெனக் குற்றம் சுமத்தப்படும் எவர் மீதும் இலங்கை அரசு எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அது உருவாக்கிய, முக்கியமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் உட்பட்ட ஒருசில உள்நாட்டுப் பொறிமுறைகளும் சுதந்திரமோ, பக்கச்சார்பின்மையோ, பாதிக்கப்பட்டோரினதும், தப்பிப்பிழைத்தோரினதும் நம்பிக்கையையோ பெறாததுடன் உண்மையான பொறுப்புக்கூறலையும் வழங்கவில்லை. இலங்கையில் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலைமை சிங்கள பௌத்த தேசியவாதத்தால் தூண்டப்படுகிறது. இதுவே மோதலுக்கான அடிப்படையாகவும், தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதும், தற்போதும் தொடர்வதுமான இராணுவமயமாக்கம், பௌத்தமயமாக்கம், காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு உந்துதலாகவும் அமைந்துள்ளது. அரசின் பகுத்தறிவுக்கு முரணான இந்தக் கொள்கைகளும் செயல்களும், நாட்டின் பொருளாதார அரசியல் நெருக்கடிக்குக் காரணமாக அமைந்ததுடன், இந்த நெருக்கடியின்போது அதிகரித்துமுள்ளன.

நீதியோ, நீடித்திருக்கும் அரசியல் தீர்வோ வழங்கப்படாதமை உட்படத் தமிழர்களின் நீண்டகால குறைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்காலத்தில் வன்முறையையும், மீறல்களையும் தடுப்பதற்கும் நாடுகள்:

• இலங்கை அரசு உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக உருவாக்கிய பொறிமுறைகளை நிராகரித்து,
– சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பதையும், (அல்லது)
– சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை குறித்த விசாரணையை நடத்துவதையும்
ஆதரிப்பதன் மூலம் மனித உரிமை மீறல்களையும், சர்வதேச குற்றங்களையும் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்படுவோரை விசாரணை செய்து வழக்குத் தொடர்வதற்கான சர்வதேச குற்றவியல் நீதிச் செயற்பாடுகளை ஆதரிக்கவேண்டும்.

• சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்திக் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விசாரணை செய்து வழக்குத் தொடரவேண்டும்.

• அனைத்து மட்ட அரசுகளிலும் சட்டசபைகளிலும், நிறைவேற்று அதிகாரப் பிரிவுகளிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும், இலங்கையின் பொறுப்பையும் அங்கீகரிக்கவேண்டும்.

• சித்திரவதை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் ஆகியன தொடர்பான சர்வதேச சாசன கடப்பாடுகளை மீறியதற்கு இலங்கையை, (தேவை ஏற்பட்டால்) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உட்பட்டவற்றில், பொறுப்பாக்கவேண்டும்.

• இலக்கு வைத்த தடைகள், வணிகம், கடன் மறுகட்டமைப்பு ஆகியவற்றில் மனித உரிமை நிபந்தனைகள், இராணுவ ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்துதல், வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல் உட்பட்ட இருதரப்பு மட்ட அழுத்தங்களைப் பிரயோகித்தல் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response