ஒரேநாளில் 2 மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்ற திமுக அரசு – மக்கள் பாராட்டு

12.4.2023 அன்று தொழிற்சாலை சட்டத்தில் தொழிலாளர் நலனுக்கு எதிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.

அதன்படி,தொழிற்சாலை முதலாளிகள் எந்த வரைமுறையும் அற்று தொழிலாளர்களிடம் 11, 12 மணிநேரம் வேலை வாங்கலாம். ஒரு வாரத்திற்கு 6 நாள் வேலை 7-வது நாள் சம்பளத்தோடு விடுமுறை, ஒரு வாரத்திற்கு அதிக அளவு வேலை நேரம் 48 மணி நேரத்தைத் தாண்டக் கூடாது என்ற ஒழுங்குமுறை இனி இருக்காது. வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கு மேல் மிகை நேரம் (ஓவர்டைம்) பணியாற்றினால் அந்த மிகை நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் என்பதோ, விடுமுறை நாளில் தேவை கருதி பணிக்கு வர நேர்ந்தால் அதற்கு மாற்றாக ஈடுகட்டும் விடுமுறை (Compensatory Off) என்பதோ இனி இருக்காது என்கிற நிலை ஏற்பட்டது.

இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக கூட்டணிக் கட்சியினரும் இச்சட்டத்தை எதிர்த்தனர்.

இதன்விளைவாக, நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், “2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமசோதா (சட்டப்பேரவை சட்டமசோதா எண்.8/2023)” என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

என்று கூறியுள்ளார்.

அதேபோல, மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் இருக்கும் இடம் தேடி மதுபானங்கள் வந்து சேரும் என்பதற்கான திட்டத்தை 23.04.2023 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மது உரிமங்கள் மற்றும் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி திருமண மண்டபங்கள், விழாக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள், வீடுகள் ஆகியவற்றில் விழாக் காலங்களுக்குத் தற்காலிக உரிமம் பெற்று, மதுபானங்கள் வழங்கலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதன் விளைவாக,மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில்….

வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபான வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் கர்நாடகா, மகாராஷ்டிரா புது தில்லி போன்ற சில மாநிலங்களில் உள்ளது.

தமிழ்நாட்டிலும் அவ்வாறு வழங்கிட 18.03.2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் திருமண கூடங்களும் இதர இடங்களும் இடம் பெற்றன. இது குறித்து பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி வரைமுறைப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

ஒரேநாளில் இரண்டு மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட திமுக அரசுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response