அமித்ஷா மிரட்டல் அடிபணிந்த ஓபிஎஸ் இபிஎஸ்

மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருதரப்பு வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டி அதனால் கூட்டணியில் சிக்கல் இல்லை என்று சொன்ன எடப்பாடி தரப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (திங்கள்) பாசக மேலிட பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.5.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர் டி.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு இணங்க, கட்சித் தலைமை பரிசீலனை செய்து, பாசகவின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி.அன்பரசன் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நாளை (26 ஆம் தேதி) டெல்லி செல்கிறார். டெல்லியில் பாசக தலைவர்கள் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரைச் சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாசகவுக்கு எதிராக அதிமுக வேட்பாளரை நிறுத்தினால், கூட்டணியில் சிக்கல் வரும் என்று பாசக கட்சி மேலிட தேர்தல் பொறுப்பாளர்களும், அமித்ஷாவும் எடப்பாடியை எச்சரித்ததாகவும், உடனடியாக வேட்பாளரைத் திரும்பப் பெற்றால் மட்டுமே டெல்லியில் பாசக தலைவர்களைச் சந்திக்க முடியும் என்று மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் பதறியடித்து வேட்பாளரைத் திரும்பப் பெற்றுள்ளார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் கடுமையாக மோதிக் கொண்டாலும் அமித்ஷாவுக்கு அடிபணியும் விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

Leave a Response