ஏமாற்றிப் பணம் வாங்கிய ஆளுநர் – அம்பலப்படுத்திய அமைச்சர்

ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு சட்டபேரவையில் நடைபெற்ற ஒரு விவாதம்….

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்: சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தை ஆளுநர் நிலுவையில் வைப்பதால் அவருக்காக வழங்கும் தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என இம்மாமன்றம் வாயிலாக கோரிக்கையை முன்வைக்கிறேன்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். காரணமில்லாமல் ரூ.5 கோடி செலவுக்கு எப்படி வழங்க முடியும். ஜனவரி முதல் மார்ச் வரை 2 மாத செலவுக்கு ரூ.2 கோடி கேட்டிருக்கின்றனர். அமைச்சர் கையெழுத்து இல்லாமல், அன்றைய நிதித் துறை செயலாளரே தன்னிச்சையாக முடிவெடுத்து அந்தத் தொகையை வழங்கியுள்ளார். மேலும், ரூ.1 இலட்சத்து 56 ஆயிரம் தொகை ரூ.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அட்சய பாத்திர திட்டத்துக்கு என்று சொல்லி, ஆளுநரின் வீட்டுக் கணக்குக்கு நிதி போயிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு புதிய ஆளுநர் வந்தபிறகு, 17 கோப்புகளின் அடிப்படையில் நம்முடைய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு ரூ.25 இலட்சம், சுற்றுப் பயணத்துக்கு ரூ.15 இலட்சம், அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ரூ.10 இலட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு ரூ.25 இலட்சம், குடியரசு தினவிழாவுக்கு ரூ.20 இலட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் எந்த மாநிலத்திலும் உள்ள ஆளுநர்களுக்கு இவ்வளவு நிதியும், கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை. எந்தத் துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு அந்தத் தொகையைக் கேட்கக்கூடாது என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் ரூ.3 கோடி தான் செலவு செய்துள்ளார். எனவே, இனி ரூ.5 கோடி வழங்கப்படாது.

அ.தி.மு.க. கொறடா வேலுமணி: அட்சய பாத்திரம் காலை உணவுத் திட்டத்தை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார் என்றுதான் அன்றைக்கு நான் கூறினேன்.

நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: திட்டத்தை நிதியமைச்சர் குறைசொல்லவில்லை. ஆளுநராக இருந்தாலும், ஆண்டவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அல்லது தவறு நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அதிமுக ஆட்சியின் போது சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அட்சய பாத்திரம் காலை உணவுத் திட்டம் தமிழக அரசின் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டதா அல்லது ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதா?

அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி: அட்சய பாத்திரம் என்ற அமைப்பினர் காலை உணவுத் திட்டத்திற்காக இடம், ஒருங்கிணைந்த சமையல் கூடம் போன்ற உதவிகளை தமிழக அரசிடம் கேட்டனர். நல்ல திட்டம் என்பதால் திட்டத்திற்கான இடங்களை வழங்கினோம். ஆனால் ஆளுநரிடம் நிதியைக் கொடுத்து அட்சய பாத்திரம் திட்டத்தை தொடங்குமாறு அப்போதைய அரசு தரப்பில் கூறவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த விவாதம் மூலம் ஆளுநரின் செலவுக் கணக்குகள் வெளிவந்ததும், இனி ஆளுநர் கேட்ட 5 கோடி வழங்கப்படாது என அமைச்சர் அறிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response